விருந்து நிகழ்ச்சியில் புகுந்து குற்றவாளிகள் சுட்டதில் ஒன்பது பேர் பரிதாப சாவு

தினகரன்  தினகரன்
விருந்து நிகழ்ச்சியில் புகுந்து குற்றவாளிகள் சுட்டதில் ஒன்பது பேர் பரிதாப சாவு

சவோ பாவ்லா: போலீசார் துரத்தியபோது, விழாக்கூட்டத்தில் புகுந்துக் கொண்ட குற்றவாளிகள், கூட்டத்தில் இருந்தபடி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அப்பாவிகள் 9 பேர் உயிரிழந்தனர்.பிரேசில் நாட்டின் சவோ பாவ்லா நகரில் நேற்று முன்தினம் போலீசாரிடம் சிக்காமல் இருசக்கர வாகனத்தில் 2 குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிப்பதற்காக பின்னாலேயே போலீசார் துரத்தினர். போலீசார் துரத்தி வருவதைக் கண்ட குற்றவாளிகள், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சினிமாவில் வரும் சம்பவம்போல், அங்கு நடந்து கொண்டிருந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் புகுந்து கொண்டனர். அதில் பெருமளவிலானவர்கள் கூடியிருந்ததாக தெரிகிறது.ஆனால், அங்கு போலீசார் வந்து குற்றவாளிகளை தேட ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குற்றவாளிகள், கூட்டத்தில் இருந்தவாறு போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பரபரப்பால் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண், பெண்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினர். இதில் குற்றவாளிகளின் துப்பாக்கி குண்டு பாய்ந்து 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த பரபரப்புக்கு இடையே அவர்கள் போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.

மூலக்கதை