கால்நடை பெண் டாக்டர் கொலை வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: நீதிமன்றத்தில் போலீசார் கோரிக்கை

தினகரன்  தினகரன்
கால்நடை பெண் டாக்டர் கொலை வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: நீதிமன்றத்தில் போலீசார் கோரிக்கை

திருமலை: கால்நடை பெண் டாக்டர் கொலை வழக்கில் கைதான 4 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் போலீசார் முறையிட்டனர்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெலங்கானா மாநிலம், சம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஆரிப், சிவா, சென்னகேசவலு, நவீன் ஆகிய 4 பேரையும் போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வதற்காக 10 நாட்கள் அனுமதி கேட்டு ஷாத் நகர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இதில் குற்றவாளிகளை கைது செய்தபோது காவல் நிலையத்தை சுற்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் குற்றவாளிகளிடம் சரியான முறையில் விசாரணை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே குற்றவாளிகளை  போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய வேண்டி இருப்பதால், அவர்களின் வாக்குமூலம் மற்றும் காணாமல் போன பிரியங்காவின் செல்போன் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே நீதிமன்றம் 10 நாட்கள் விசாரணைக்கு அனுமதி வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் நேற்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து நீதிபதி சாம் பிரசாத் விசாரித்து போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க 10 நாட்கள் விசாரணைக்கு அனுமதி வழங்குவாரா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும். இந்நிலையில் சாத்நகர் நீதிமன்றம்,  மெகபூப் நகர் நீதிமன்ற பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள், பிரியங்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 4 பேருக்கும் கடும் தண்டனை கிடைக்க வேண்டும். எனவே இந்த வழக்கில் எந்த ஒரு வழக்கறிஞர்களும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிட கூடாது என முடிவு செய்துள்ளனர். இதற்கு அனைத்து வழக்கறிஞர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.விரைவு நீதிமன்றம்: இதற்கிடையே  இந்த வழக்கில் தெலங்கானா மாநில அரசின் விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் படி செய்யப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

மூலக்கதை