சிக்கன் பர்கர்... சாக்லேட் ஷேக் * கோஹ்லி கொண்டாட்டம் ஏன் | டிசம்பர் 02, 2019

தினமலர்  தினமலர்
சிக்கன் பர்கர்... சாக்லேட் ஷேக் * கோஹ்லி கொண்டாட்டம் ஏன் | டிசம்பர் 02, 2019

 கோல்கட்டா: இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த போது, கோஹ்லி தனக்குத் தானே ‘பார்ட்டி’ வைத்துக் கொண்டாராம். இதில் சிக்கன் பர்கர், பிரெஞ்ச் பிரை, சாக்லேட் ஷேக் என பல உணவுகளை ஒரு பிடி பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி 31. உணவு விஷயங்களில் கறாராக நடந்து கொள்ளும் இவர், உடற்தகுதியை சிறப்பாக பராமரிப்பார். போட்டி நிறைந்த நவீன விளையாட்டு உலகத்தில் சக வீரர்களும் சரியான முறையில் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் கண்டிப்பானவர்.

கடந்த 2016ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது, மும்பை டெஸ்டில் இவர் 235 ரன்கள் விளாசினார். இதன் பின் நடந்தது குறித்து கோஹ்லி கூறியது:

பொதுவாக போட்டியில் விளையாடும் போது அதிகமாக சாப்பிட விரும்ப மாட்டேன். வாழைப்பழம், தண்ணீர் சற்று பருப்பு சாதம் மட்டும் எடுத்துக் கொள்வேன். அன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 235 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினேன். அதிகமாக பசித்தது.

அப்போதைய உடற்தகுதி நிபுணர் ஷங்கர் பாசு,‘இன்று இரவு உனக்கு என்ன விருப்பமாக உள்ளதோ அனைத்தையும் சாப்பிடு,’ என்றார். அப்போது இறைச்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இருப்பினும் சிக்கன் பர்கர் வரவழைத்தேன்.

இதைப் பார்த்ததும் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு துண்டு ‘பிரட்’ போதும், இரண்டு வேண்டாம் என எனக்கு நானே கூறிக் கொண்டு, அடுத்து ஒரு பெரிய ‘பிளேட்’ அளவுக்கு பிரெஞ்ச் பிரை ‘ஆர்டர்’ செய்தேன். இத்துடன் சாக்லேட் ‘ஷேக்கும்’ சேர்த்து சாப்பிட்டு மகிழ்ந்தேன். ஏனெனில் இதெல்லாம் எனக்குத் தேவை என மனது சொல்லியது.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

மூலக்கதை