ரயில்வே நிர்வாகம் படுமோசம் வரவு எட்டணா செலவு பத்தணா: சிஏஜி அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
ரயில்வே நிர்வாகம் படுமோசம் வரவு எட்டணா செலவு பத்தணா: சிஏஜி அதிர்ச்சி

புதுடெல்லி: ‘வரவு எட்டணா, செலவு பத்தணா, கடையில்....’ என்ற பாடல் வரிகளுக்கு பொரு த்தமான நிர்வாகத்தை செய்துள்ளது ரயில்வே. இது சிஏஜி அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  ரயில்வே தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சிஏஜி நேற்று சமர்ப்பித்தது. இதில் ரயில்வேயின் இயக்க விகிதம் 2017-18 நிதியாண்டில் 98.44 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்க விகிதம் அதிகரித்தால், அது ஆரோக்கியமானதல்ல. நிதி நிர்வாகம் சரியில்லை என்பதை காட்டும் குறியீடாக இது கருதப்படுகிறது. ரயில்வே இயக்க விகிதம் 98.44 சதவீதம் என்பது, நூறு ரூபாய் சம்பாதிக்க 98.44 சதவீதம் செலவாகி விடுகிறது என்பதை குறிப்பிடுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு படுமோசமான நிலை என சிஏஜி விமர்சித்துள்ளது. ரயில்வே மேற்கண்ட நிதியாண்டில் ₹1,665.61 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக கணக்கு காட்டியுள்ளது. உண்மையில் என்டிபிசி மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை கட்டுமான நிறுவனமான இர்கானில் இருந்து முன்பணமாக இந்த தொகையை வாங்கியுள்ளது. இதையும் கழித்து விட்டால் ₹5,676.29 கோடி நஷ்டம்தான் மிஞ்சியிருக்கும். இதன்படி கணக்கிட்டால் இந்த இயக்க செலவு 102.66 சதவீதம். ஆக... வரவு எட்டணா, செலவு பத்தணா... என்ற அதிர்ச்சி விவரத்தை அம்பலப்படுத்தியுள்ளது சிஏஜி. மூத்த குடிமக்கள் கட்டண சலுகையை விட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கை எடுபடவில்லை. ரயில்வே பயண பாஸ், முறைகேடான மருத்துவ சான்றிதழை வைத்து சலுகை பெறுதல் போன்றவற்றால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நிகர உபரி வருவாய் 66.1% குறைந்துள்ளது என சிஏஜி தெரிவித்துள்ளது.

மூலக்கதை