அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்!

தினமலர்  தினமலர்
அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்!

புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, கடந்த மாதம், 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக, அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

5 ஏக்கர் நிலம்


இந்த வழக்கின் ஒரு தரப்பான, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், 'சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை' என, ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதே நேரத்தில், 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து, அது, எந்த முடிவையும் எடுக்கவில்லை. அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகளும், 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்' என, அறிவித்திருந்தன.

சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு, வரும், 9ம் தேதி வரையே அவகாசம் உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்த, சித்திகி என்பவர் சார்பில், அவருடைய வாரிசான, மவுலானா சையது ஆஷாத் ரஷீத், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜமாஉத் - உலேமா -இ - ஹிந்த் அமைப்பின் முக்கியப் பொறுப்பிலும் அவர் உள்ளார்.

மறுஆய்வு


சீராய்வு மனுவில் கூறியுள்ளதாவது:அயோத்தி நிலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பல தவறுகள் உள்ளன. அரசியல் சாசனத்தின், 137வது பிரிவின்படி, இந்தத் தீர்ப்பு மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது.இந்த வழக்கில், இரு தரப்புக்கும் சமமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கருதி உள்ளது. அதனால், ஹிந்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு, நாங்கள் கோரிக்கை வைக்காத நிலையில், 5 ஏக்கர் நிலத்தை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாங்கள் தீர்ப்பை முழுமையாக எதிர்க்கவில்லை.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தாக்கல் குறித்து, ஜமாஉத் - உலேமா - இ - ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறியதாவது:பெரும்பாலான முஸ்லிம்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர். இதில், மாற்றுக் கருத்து உள்ளோர் மிகவும் குறைவே. சீராய்வு மனு தாக்கல் செய்யும் உரிமையை நீதிமன்றம் அளித்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய பிரச்னையே, கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதா என்பதே. அதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியிருக்கையில், முஸ்லிம்கள் தரப்புக்கே நிலத்தின் உரிமை இருப்பது உறுதியாகிறது. ஆனால், தீர்ப்பு மாறுபட்டு உள்ளது. அதனால் தான், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை