அனைத்து துறை செயலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுங்க! மழையால் உயிர், பொருட்சேதம் தவிர்க்க முதல்வர் உத்தரவு

தினமலர்  தினமலர்
அனைத்து துறை செயலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுங்க! மழையால் உயிர், பொருட்சேதம் தவிர்க்க முதல்வர் உத்தரவு

சென்னை : 'வட கிழக்கு பருவமழை காலத்தில், உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து அரசு துறை செயலர்களும், துறை தலைவர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் சிலநாட்களுக்கும், மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, எடுக்கப்பட்டுள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விவரித்தார். பின், கூட்டத்தில், முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்:

● மழை காலங்களில், கீழே விழும் மரங்களை அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள், மின் மோட்டார்கள் தயாராக இருக்க வேண்டும்● பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மீட்பு குழுக்கள் விரைவில் சென்றடைய, தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

● மழை காரணமாக, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க, போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் மருந்துகள் இருப்பு இருக்க வேண்டும்.

● தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். போதுமான அளவு மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க, போதிய ஜெனரேட்டர் வசதியையும் செய்திருக்க வேண்டும்.

● ரேஷன் கடைகளில் போதிய அத்தியாவசியப் பொருட்கள், இருப்பு வைக்கப் பட்டுள்ளன● கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப் பட்டு உள்ள, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

● உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படுவதை தவிர்க்க, அனைத்து அரசு துறை செயலர்களும், துறைத் தலைவர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

● அனைத்து நீர்தேக்கங்களும் கண்காணிக்கப்பட வேண்டும். மழை நீர் தேங்கினால், அதை துரிதமாக வெளியேற்ற வேண்டும். போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில், உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

● சூறாவளி, வெள்ளம், இடி, மின்னல் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள, விழிப்புணர்வு குறும்படங்களை, தியேட்டர்கள் மற்றும் கேபிள், 'டிவி' வாயிலாக ஒளிபரப்ப வேண்டும்.

● தமிழகத்தில், நவ. 29 முதல், நேற்று முன்தினம் வரை, எட்டு பேர் இறந்துள்ளனர்; 58 கால்நடைகள் இறந்துள்ளன. 1,305 குடிசை வீடுகளும், 465 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

● மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக இடுபொருள் மானியம் வழங்கவும், காப்பீட்டு தொகையை பெற்றுத் தரவும், காப்பீட்டு காலத்தை, நீட்டிப்பு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

● நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளோருக்கு, தேவையான அடிப்படை வசதிகளை, உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரூ.4 லட்சம் நிவாரணம்.

● கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, நடூர் கிராமத்தில், மூன்று வீடுகள் மீது, சுவர் இடிந்து விழுந்ததில், 17 பேர் இறந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, தலா, நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

● முதல்வர் இன்று கோவை செல்கிறார். அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை