திரும்புகிறது! கடலூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை...முகாம்களை காலி செய்யும் பொதுமக்கள்

தினமலர்  தினமலர்
திரும்புகிறது! கடலூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை...முகாம்களை காலி செய்யும் பொதுமக்கள்


கடலுார்:கடலுார் மாவட்டத்தில், தற்போது மழை குறைந்ததால், வீடுகளில் புகுந்த தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

கடலுார் மாவட்டம் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்புகிறது.கடலுார் மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. நவம்பர் 30ம் தேதி 116 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால், தண்ணீர் வடிய வழியில்லாமல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நெற் பயிரை மழை நீர் சூழந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.வீடுகளில் தண்ணீர் புகுந்த பகுதி மக்களை, மாவட்ட நிர்வாகம் மீட்டு முகாம்களில் தங்க வைத்தது.

மாவட்டம் முழுவதும் 6 முகாம்களில் ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று முதல் மழை குறைந்தது. நேற்று காலையில் லேசான துாறல் மழையும், மாலையில் சிறிது நேரம் மழை பெய்ததே தவிர, பெரிய அளவிலான மழையில்லை. அதனால் வீடுகளில் புகுந்த தண்ணீர் வடிய துவங்கியுள்ளது. சில இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.முகாம்களில் இருந்தவர்கள் அவர்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். சமைக்க முடியாத நிலையில் உள்ளவர்கள், முகாம்களில் சமைக்கப்படும் உணவை மட்டும் வாங்கிக்கொண்டு சென்று விடுகின்றனர். பெண்ணையாற்றின் செக்டேம் வழிந்து சென்ற உபரி நீர், நேற்று மழையில்லாததால் முழுவதுமாக குறைந்து விட்டது.

கடற்கரையோர கிராமங்களான சுப உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா போன்ற கிராமங்களை சுற்றி அதிகளவில் தண்ணீர் சூழ்ந்திருந்தது. இதனால் சுப உப்பலவாடி கிராமத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதையொட்டி நேற்று பெண்ணையாற்றின் முகத்துவாரத்தில் இருந்த மண் மேடுகள், பொக்லைன் இயந்திரத்தால் அகற்றப்பட்டு, கடலுக்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தேங்கி இருந்த தண்ணீர் வடிந்து வருகிறது. அதேபோல், மாவட்டம் முழுவதும் தேங்கி இருந்த தண்ணீர் விரைவாக வடிய துவங்கியதால், மக்கள் மாமூல் வாழ்க்கையை துவங்கி உள்ளனர்.

கடலுார் தானம் நகர், தங்கராஜ் நகர், சுப்புராயிலு நகர், டான்சி தொழில் வளாகம், குப்பன்குளம், மஞ்சக்குப்பம் பகுதியில் வில்வநகர், வண்ணான்குட்டை, தேவநாதசுவாமி தெரு, ராமசாமிநகர் உள்ளிட்ட பகுதிகளில், தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி நடந்தது. 9 ஆயில் இன்ஜின்கள், 10 ஜே.சி.பி., இயந்திரங்கள், 10 டிராக்டர்கள் ,கம்ப்ரசர் இயந்திரங்களை கொண்டு அடைப்பு நீக்கப்பட்டு, மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என நகராட்சி இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் தெரிவித்தார்.
மழை அளவு

கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:சிதம்பரம் 59 மி.மீ., சேத்தியாத்தோப்பு 50.20, புவனகிரி 49, அண்ணாமலை நகர் 40.60, குறிஞ்சிப்பாடி 27, லால்பேட்டை 31, கீழ்ச்செருவாய் 27, கொத்தவாச்சேரி 25, காட்டுமன்னார்கோவில் 24, பரங்கிப்பேட்டை 23, ஸ்ரீமுஷ்ணம் 20.20, பெலாந்துறை 19.80, வடக்குத்து 19, குப்பனத்தம் 15, கடலுார் 14.90, பண்ருட்டி 14, கலெக்டரேட் 12.60, விருத்தாசலம் 11.40, மேமாத்துார் 10, வானமாதேவி 9, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி 7.50, லக்கூர் 7, வேப்பூர் 5, தொழுதுார் 4, காட்டுமயிலுார் 4 மி.மீ., மழை பெய்துள்ளது.

மூலக்கதை