தமிழக பாரம்பரிய ஆடைகளில் வெளிநாட்டுப் பயணியர்

தினமலர்  தினமலர்
தமிழக பாரம்பரிய ஆடைகளில் வெளிநாட்டுப் பயணியர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சுற்றுலா வரும், வெளிநாட்டுப் பயணியர், தமிழக பாரம்பரிய வேட்டி, சேலை அணிய, ஆர்வம் காட்டுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், முறைசாரா மாநாடாக, மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய ஆடை, வெண்மை நிற வேட்டி, சட்டை அணிந்து, தோளில் துண்டுடன், சீன அதிபரை வரவேற்றார். சிற்பங்கள் குறித்து, அவருக்கு விளக்கினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து, இவ்வூர், உலக நாடுகள் கவனத்தை ஈர்த்து, மேலும் புகழ்பெற்றது.சீனா உள்ளிட்ட வெளி நாட்டுப் பயணியர் குவியும் சூழலில், வேட்டி, சட்டை, சேலை அணிய, இப்பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.

சுற்றுலா வந்த, அமெரிக்கா, குரோஷியா உள்ளிட்ட வெளிநாட்டினர், வேட்டி - சேலை அணிந்தே சிற்பங்கள் கண்டுகளித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தமிழக சுற்றுலா இடங்களை, ஏற்கனவே, முன்பே கண்டிருக்கிறோம். சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை, காஞ்சி புரம் கோவில்கள் சென்ற போது, பக்தர்கள், வேட்டி, சேலையுடன், வழிபட வருவதை கண்டு, வியந்துள்ளோம்.

உங்கள் பிரதமர், சீன அதிபரை, வேட்டி, சட்டையுடன், சந்தித்த பிறகே, தமிழக பழமை ஆடை மகத்துவம் உணர்ந்தோம். தமிழகம் வரும்போது, நாங்களும் அணிய விரும்பி, இந்த ஆடை அணிந்தே, வலம் வருகிறோம். உலகில் சிறந்தது, உங்களின் எளிய ஆடை தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை