மாற்றத்தை உருவாக்க தேர்தலில் போட்டி: ராஜேந்தர்

தினமலர்  தினமலர்
மாற்றத்தை உருவாக்க தேர்தலில் போட்டி: ராஜேந்தர்

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட நடிகரும், இயக்குநரும், விநியோகஸ்தருமான டி.ராஜேந்தர் மனு தாக்கல் செய்தார்.

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் வரும் 22ல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தத் தேர்தலில், இம்முறை தலைவர் பதவிக்கு நான் போட்டியிடப் போகிறேன். சங்கத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என, கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்தார் நடிகர் ராஜேந்தர்.

அதன்படியே, தலைவர் பதவிக்குப் போட்டியிட, இன்று(டிச.,2) சென்னை, மவுண்ட் ரோடு அருகில் இருக்கும் மீரான் சாஹிப் தெருவில் இருக்கும் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற ராஜேந்தர், அங்கு தனது விண்ணப்ப மனுவை அளித்தார்.

பின், அவர் பேசியதாவது: ஏற்கனவே சொன்னது தான், சங்கத்தை நிறைய சீரமைக்க வேண்டியிருக்கிறது. பழையபடியே செயல்பட அனுமதிக்க முடியாது. அதனால், மாற்றத்தைத் தேடி, தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன். கட்டாயம் வெற்றி பெறுவேன். நிச்சயம் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்வேன்.
இவ்வாறு ராஜேந்தர் பேசினார்.

மூலக்கதை