மீண்டு வருவாரா ஸ்மித் * பாக்., அணியுடன் பகலிரவு டெஸ்ட் | நவம்பர் 28, 2019

தினமலர்  தினமலர்
மீண்டு வருவாரா ஸ்மித் * பாக்., அணியுடன் பகலிரவு டெஸ்ட் | நவம்பர் 28, 2019

அடிலெய்டு: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதும் பகலிரவு டெஸ்ட் இன்று அடிலெய்டில் துவங்குகிறது. முதல் டெஸ்டில் ஏமாற்றிய ஸ்மித் இதில் சிறப்பாக செயல்படுவார் என நம்பப்படுகிறது.

ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இருப்பினும், இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீஸ் ஸ்மித் 4 ரன்னுக்கு யாஷிர் ஷா சுழலில் சிக்கினார். இவரது சுழலில் 7வது முறையாக (6 டெஸ்ட்) அவுட்டாகியதை குறிக்கும் வகையில் யாஷிர் ஷா, 7 விரல்களை காட்டி கொண்டாடினார்.

போட்டி முடிந்ததும் விரக்தியில் இருந்த ஸ்மித், சக வீரர்கள் ஓட்டலுக்கு சென்ற பஸ்சில் ஏறவில்லை. மாறாக 3 கி.மீ., துாரம் ஓடிச் சென்று ஓட்டலை அடைந்தார். இவர், தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டது  பிறகு தான் தெரிந்தது.

ஸ்மித் கூறுகையில்,‘‘சிறப்பாக விளையாடவில்லை எனில் இப்படி ஓடுவேன், அல்லது ஜிம் சென்று பயிற்சி செய்வேன். நன்றாக விளையாடினால் சாக்லைட் சாப்பிட்டு மகிழ்வேன். இன்று துவங்கும் பகலிரவு டெஸ்டில், யாஷிர் ஷா சுழலை நன்றாக கணித்து விளையாடுவேன்,’ என்றார்.

இதனிடையே முதல் டெஸ்டில் சதம் விளாசிய வார்னர் (154), லபுசேன் (185) மீண்டும் மிரட்டக் காத்திருக்கின்றனர். பர்ன்ஸ், வேட் கூட்டணியும் ரன் வேட்டைக்கு காத்திருக்கிறது. பவுலிங்கில் மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் இணை மறுபடியும் மிரட்டலாம்.

பாக்., எப்படி

பாகிஸ்தான் அணி 4வது முறையாக பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. இதில் 1 வெற்றி, 2 தோல்வி பெற்றது. இம்முறை பாபர் ஆசம், ரிஸ்வானுடன் கேப்டன் அசார் அலி, ஹாரிஸ் சோகைல் பேட்டிங்கில் உதவ வேண்டும். சுழலில் ‘சீனியர்’ யாஷிர் ஷா இருப்பது பலம்.

இதற்கு முன் மோதிய 5 பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வென்றுள்ளது. மீண்டும் மிரட்டும் பட்சத்தில் இந்த அணி 2–0 என தொடரை கைப்பற்றலாம்.

மூலக்கதை