அபிமன்யு மிதுன் அசத்தல்: ஒரே ஓவரில் 5 விக்கெட் | நவம்பர் 29, 2019

தினமலர்  தினமலர்
அபிமன்யு மிதுன் அசத்தல்: ஒரே ஓவரில் 5 விக்கெட் | நவம்பர் 29, 2019

சூரத்: ஹரியானாவுக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபி அரையிறுதியில் ‘வேகத்தில்’ மிரட்டிய அபிமன்யு மிதுன், ஒரே ஓவரில் ‘ஹாட்ரிக்’ உட்பட 5 விக்கெட் கைப்பற்றினார். தேவ்தத், லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்து கைகொடுக்க கர்நாடகா அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம் சூரத்தில், சையது முஷ்தாக் அலி டிராபி ‘டுவென்டி–20’ கிரிக்கெட் அரையிறுதி நடந்தது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ கர்நாடகா, ஹரியானா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கர்நாடகா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

மிதுன் கலக்கல்: ஹரியானா அணி 19 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. அபிமன்யு மிதுன் வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்தில் ஹிமான்ஷு ராணா (61), ராகுல் திவாதியா (32), சுமித் குமார் (0), கேப்டன் அமித் மிஸ்ரா (0) ஆகியோரை அவுட்டாகினர். கடைசி பந்தில் ஜெயந்த் யாதவ் (0) வெளியேறினார்.

ஹரியானா அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது.

சூப்பர் துவக்கம்: சவாலான இலக்கை விரட்டிய கர்நாடகா அணிக்கு லோகேஷ் ராகுல் (66), தேவ்தத் (87) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். கர்நாடகா அணி 15 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் (30), கேப்டன் மணிஷ் பாண்டே (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதல் வீரர்

வேகப்பந்துவீச்சில் அசத்திய கர்நாடகா அணியின் அபிமன்யு மிதுன், உள்ளூர் தொடரில் மூன்று வித போட்டிகளிலும் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் வீரரானார். கடந்த 2009ல் உ.பி., அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை (முதல் தரம்) சூப்பர் லீக் போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றிய இவர், சமீபத்தில் முடிந்த விஜய் ஹசாரே டிராபி (‘லிஸ்ட் ஏ’) பைனலில் தமிழக அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

* இலங்கையின் மலிங்காவுக்கு பின் (எதிர்: நியூசிலாந்து, 2019), ‘டுவென்டி–20’ போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் கைப்பற்றிய பவுலரானார் மிதுன்.

* ‘டுவென்டி–20’ அரங்கில் வங்கதேசத்தின் அல் அமின் ஹொசைனுக்கு பின், ஒரே ஓவரில் 5 விக்கெட் கைப்பற்றிய பவுலரானார் மிதுன். கடந்த 2013ல் வங்கதேசத்தில் நடந்த உள்ளூர் போட்டியில் அல் அமின் ஹொசைன், ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

மூலக்கதை