வாஷிங்டன் சுந்தர் அரைசதம்: பைனலில் தமிழகம் | நவம்பர் 29, 2019

தினமலர்  தினமலர்
வாஷிங்டன் சுந்தர் அரைசதம்: பைனலில் தமிழகம் | நவம்பர் 29, 2019

சூரத்: ராஜஸ்தானுக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபி அரையிறுதியில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்து கைகொடுக்க தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பைனலில் (டிச. 1)  ‘நடப்பு சாம்பியன்’ கர்நாடகாவை எதிர்கொள்கிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில், சையது முஷ்தாக் அலி டிராபி ‘டுவென்டி–20’ கிரிக்கெட் அரையிறுதி நடந்தது. இதில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சங்கர் அசத்தல்: ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் தீபக் சகார் (9), அன்கித் லம்பா (15), மஹிபால் லோமர் (6) ஏமாற்றினர். விஜய் சங்கர் பந்தில் அர்ஜித் குப்தா (8), சல்மான் கான் (1) அவுட்டாகினர். ராஜேஷ் பிஷ்னோய் (23) ஆறுதல் தந்தார். அஷ்வின் ‘சுழலில்’ மனேந்தர் சிங் (7) சிக்கினார். சந்திரபால் சிங் (15), அனிகேத் சவுத்தரி (1) ‘ரன்–அவுட்’ ஆகினர்.

ராஜஸ்தான் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்தது. ரவி பிஷ்னோய் (22) அவுட்டாகாமல் இருந்தார். தமிழக அணி சார்பில் விஜய் சங்கர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

சுந்தர் அபாரம்: சுலப இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு ஹரி நிஷாந்த் (0) ஏமாற்றினார். அஷ்வின் (31) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் (17) நிலைக்கவில்லை. லோமர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பாபா அபராஜித் வெற்றியை உறுதி செய்தார்.

தமிழக அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுந்தர் (54), அபராஜித் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

பைனலில் (டிச. 1) தமிழகம், கர்நாடகா அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை