வார்னர் 335 ரன் விளாசல் * பகலிரவு டெஸ்டில் அசத்தல் | நவம்பர் 30, 2019

தினமலர்  தினமலர்
வார்னர் 335 ரன் விளாசல் * பகலிரவு டெஸ்டில் அசத்தல் | நவம்பர் 30, 2019

அடிலெய்டு: பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் முச்சதம் கடந்து அசத்தினார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடக்கிறது.

முதல் நாள் முடிவில்ஆஸ்திரேலியஅணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.

வார்னர் முச்சதம்

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. லபுசேன், 162 ரன்களுக்கு அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் 36 ரன் எடுத்தார். அபாஸ் பந்தில் பவுண்டரி அடித்த வார்னர், பகலிரவு மற்றும் டெஸ்ட் அரங்கில் தனது முதல் முச்சதம் எட்டினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. வார்னர் 335 (418 பந்து), வேட் 38 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் சரிவு

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ‘டாப் ஆர்டர்’ சொதப்பியது. ஷான் மசூது (19), இமாம் உல் ஹக் (2), கேப்டன் அசார் அலி (9) நிலைக்கவில்லை. ஆசாத் சபிக் (9), இப்திகார் (10) கைவிட்டனர். இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்து, 493 ரன்கள் பின்தங்கி இருந்தது. பாபர் ஆசம் (43), யாஷிர் ஷா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.


பிராட்மேனை முந்தினார்.

வார்னர் 300 ரன்கள் எடுத்த போது, அடிலெய்டில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய ‘ஜாம்பவான்’ பிராட்மேனை (299 ரன் எதிர்–தென் ஆப்ரிக்கா, அடிலெய்டு, 1932 )முந்தினார். 

* டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்களில் ஹைடனுக்கு (380) அடுத்த இடம் பெற்றார் வார்னர் (335).

* முச்சதம் அடித்த 7வது ஆஸ்திரேலிய வீரர் ஆனார்.

* சர்வதேச அளவில் 10வது அதிகபட்ச ஸ்கோர் இது. முதல் மூன்று இடத்தில் விண்டீசின் லாரா (400), ஹைடன் (380), லாரா (375) உள்ளனர்.

 

7000

நேற்று 23 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 7000 ரன்கள் எடுத்த வீரர் என்ற ஹம்மண்டின் (இங்கிலாந்து, 131 இன்னிங்ஸ்) சாதனையை 73 ஆண்டுக்குப் பின் முறியடித்தார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். இவர் 126 இன்னிங்சில் (70 டெஸ்ட்) இந்த இலக்கை எட்டினார். இந்தியாவின் சேவக் (134), சச்சின் (136) 3, 4வது இடத்தில் உள்ளனர். 

* அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் பிராட்மேனை (6,996) முந்தி 11வது இடம் பெற்றார் ஸ்மித். முதலிடத்தில் பாண்டிங் (13,378) உள்ளார்.

 

‘டிக்ளேர்’ சரியா

வார்னர் 335 ரன் எடுத்த போது, ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் ‘டிக்ளேர்’ செய்யாமல் இருந்திருந்தால், டெஸ்டில் அதிக ரன் எடுத்த லாராவின் (400) சாதனையை தகர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 2004ல் பாகிஸ்தானுக்கு எதிரான முல்தான் டெஸ்டில் சச்சின் 194 ரன் எடுத்திருந்த போது, டிராவிட் ‘டிக்ளேர்’ செய்தது போல இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்யும் நிலை இருப்பதால், மாலைப் பொழுதில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தால், விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முயற்சிக்கலாம்  என்ற எண்ணத்தில் பெய்ன், இப்படிச் செய்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை