தோனி விஷயத்தில் ரகசியம் | நவம்பர் 30, 2019

தினமலர்  தினமலர்
தோனி விஷயத்தில் ரகசியம் | நவம்பர் 30, 2019

கோல்கட்டா: ‘‘தோனியின் எதிர்காலம் குறித்து பொதுவெளியில் பேச முடியாது. சரியான நேரம் வரும்போது, நீங்கள் அறிந்து கொள்ளலாம்,’’ என, பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி. இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பை வென்று தந்தவர். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த உலக கோப்பை தொடருக்குப்பின், எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. வயது 38ஐ எட்டிவிட்டதால் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், ‘ ஜனவரி வரை எதுவும் கேட்க வேண்டாம்,’ என தோனி தெரிவித்துவிட்டார். இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியோ,‘ அடுத்த ஐ.பி.எல்.. தொடருக்குப்பின், தோனியின் முடிவு குறித்து தெரியலாம்,’ என கணித்துள்ளார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி கூறுகையில்,‘‘ தோனியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய, போதுமான அவகாசம் உள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் கூட உறுதியாக தெரியலாம். தோனி விவகாரத்தில் எங்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை. நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இந்தியாவின் விளையாட்டு நட்சத்திரமாக தோனி திகழ்கிறார். சாம்பியன் வீரரான இவரது எதிர்காலம் குறித்த விஷயங்களை பொதுவெளியில் பேச முடியாது. பி.சி.சி.ஐ., மற்றும் தேர்வுக்குழு, தோனிக்கு இடையே வெளிப்படைத்தன்மை உள்ளது. சரியான நேரம் வரும்போது, இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்,’’ என்றார்.

 

 

மூலக்கதை