முழுநேர கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேவையில்லை 70 வயசானவங்களுக்கெல்லாம் பதவி கிடையாது: லோதா கமிட்டி விதிமுறையை ஓரங்கட்டும் பிசிசிஐ

தமிழ் முரசு  தமிழ் முரசு
முழுநேர கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேவையில்லை 70 வயசானவங்களுக்கெல்லாம் பதவி கிடையாது: லோதா கமிட்டி விதிமுறையை ஓரங்கட்டும் பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) புதிய தலைவராக கடந்த  அக்டோபரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவி ஏற்றார்.   இவரது தலைமையில், முதன்முறையாக பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்  மும்பையில் நடந்தது. இதில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா குழு  அளித்த விதிமுறையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்குவங்க கிரிக்கெட்  சங்க தலைவராக கங்குலி ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் இருந்துவிட்டார். இதனால்,  பிசிசிஐ தலைவராக 9 மாதங்கள் மட்டுமே நீடிக்க முடியும்.

இதே சிக்கலில்  பிசிசிஐ செயலரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான  ஜெய்ஷாவும் உள்ளார்.
அதனால், உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களின் கீழ், அதன் அதிகாரிகளின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்த முடிவு செய்தது.

அந்தவகையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒன்பது மாத காலத்தை மேலும் அதிகரிக்க (2024 வரை) புதிய விதிமுறையில் வழிவகுக்கப்பட்டுள்ளது. எனினும் இதை செயல்படுத்த உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.

இதுதொடர்பாக தகவல் அளித்து, ஒரு உயர் அதிகாரி, முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது அவை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், புதிய விதிமுறையின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது.

மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ச்சியாக பதவியில் நீடிக்க முடியும்.

அதன் பின்னர் மீண்டும் பதவிக்கு வர விரும்பினால் 3 ஆண்டுகள் இடைவெளி இருத்தல் அவசியம். கிரிக்கெட் வாரிய செயலாளரை விட தலைமை செயல் அதிகாரிக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.

முழுநேர கிரிக்கெட் ஆலோசனை குழு (சிஏசி) தேவையில்லை ேபான்ற பல அம்சங்கள் உள்ளன. முன்னதாக, புதிய விதிமுறைகளை உருவாக்க நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதற்கு லோதா கமிட்டி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ஆலோசனைக்குழுவிலிருந்து ஏற்கனவே விலகிய முன்னாள் வீரர்களான சச்சின், லட்சுமணுக்கு மீண்டும் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஒருசில நாளில் உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அனுமதி கிடைக்குமா? என்பது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே தெரியவரும்.

.

மூலக்கதை