தேர்தல் பரபரப்பு ஓய்ந்ததை தொடர்ந்து ஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்

தினகரன்  தினகரன்
தேர்தல் பரபரப்பு ஓய்ந்ததை தொடர்ந்து ஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தல் முடிந்த நிலையில், அரசு சலுகைகளை வழங்கக்கோரி மீண்டும் போராட்டம் தொடங்கியது. ஹாங்காங்கில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் தொடர்ந்து வலுத்து வந்தது. இதன் காரணமாக மசோதாவை அரசு திரும்ப பெற்றது. எனினும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள், பேரணிகளையும், போராட்டங்களையும் தொடர்ந்தனர். இதன் காரணமாக, கடந்த 6 மாதங்களாக ஹாங்காங்கில் அமைதி சீர்குலைந்துள்ளது.. இந்த சூழலில் அங்கு மாவட்ட கவுன்சில் தேர்தல் நடந்தது. இதனால், போராட்டங்கள் சற்று ஓய்திருந்தன. அனைவரும் தேர்தலில் கவனம் செலுத்தினார்கள். இந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சி வேட்பாளர்கள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றனர். தேர்தல் பரபரப்பு முடிந்ததும், போராட்டக்காரர்கள் நேற்று முதல் மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். முன்னதாக, தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும், அந்நாட்டு எம்பி.க்களுக்கும் போராட்டகாரர்கள் ஒன்று திரண்டு நன்றி கூறினார்கள். ‘‘மாவட்ட கவுன்சில் தேர்தலில் சிறு வெற்றி கிடைத்த போதிலும், எதற்காக இந்த போராட்டத்தை தொடங்கினோம் என்பதை யாரும் மறக்கக் கூடாது, நமது 5 கோரிக்கைகளும் வெற்றி பெறும் வரை போராட்டத்தை தொடர வேண்டும்,’’ என மக்களுக்கு போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலக்கதை