பிரதமர் ராஜினாமா: ஈராக் பார்லி., ஏற்பு

தினமலர்  தினமலர்
பிரதமர் ராஜினாமா: ஈராக் பார்லி., ஏற்பு

பாக்தாத்: பொதுமக்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் அதில் உயிர் பலி அதிகரித்து வந்ததையடுத்து, மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் பிரதமர் அதெல் அப்தெல் மெஹ்தி, தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அதை, பார்லிமென்ட் ஏற்றுக் கொண்டது.எண்ணெய் வளமிக்க, ஆனால், ஏழை நாடாக உள்ள ஈராக்கில், மெஹ்தி அரசுக்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் கடன் அதிகரித்தது, ஊழல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் போராட்டங்கள் நடந்து வந்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 420 பேர் கொல்லப்பட்டனர்.அதையடுத்து, பிரதமர் பதவியில் விலகுவதற்கு, மெஹ்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. போராட்டங்கள் தீவிரமடைந்ததாலும், உயிர் பலி அதிகரித்துள்ளதாலும், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக, மெஹ்தி நேற்று அறிவித்தார். அதை பார்லி., ஏற்றுக் கொண்டது.அதையடுத்து, காபந்து பிரதமராக அவர் செயல்படுவார். இந்த நிலையில், புதிய பிரதமரை அறிவிக்கும்படி, அதிபர் பர்ஹாம் சலேஹுக்கு, பார்லி., பரிந்துரை செய்துள்ளது.ஈராக் அதிபராக சதாம் உசேன் இருந்தபோது, 2003ல், அமெரிக்கப் படைகள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி, ஆட்சியில் இருந்து அவரை நீக்கியது. பின், அவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு, அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த, 2003க்குப் பின், நாட்டில் நடக்கும் மிகப் பெரிய போராட்டம் இது.போலீசுக்கு துாக்குபோராட்டத்தில் ஈடுபட்டோரை கொன்றதாக, ஒரு போலீஸ் அதிகாரிக்கு, துாக்கு தண்டனை விதித்து, ஈராக் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. போராட்டம் தொடர்பான வழக்குகளில் வழங்கப்படும் முதல் தீர்ப்பு இது. ஏழு பேரை கொன்ற வழக்கில், இவரைத் தவிர மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை