முதலீட்டு சூழலை மாற்ற வேண்டும்

தினமலர்  தினமலர்
முதலீட்டு சூழலை மாற்ற வேண்டும்

இந்திய பொருளாதாரம், கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவிட்ட மிகக் குறைவான, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதமான, 4.5 சதவீதத்தை தொட்டுள்ளது.

இது போன்ற இருண்ட சூழல் இதற்கு முன், 2012 – -13ல் காணப்பட்டது. வளர்ச்சி குறைவது எதனால் ஏற்படுகிறது என்பதும், அதற்கான தீர்வுகளை நோக்கி செல்வதும், அரசின் உடனடி கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த சில மாதங்களாகவே வட்டி குறைப்பு, பணப் புழக்கம் அதிகரிப்பு, வரி குறைப்பு, அரசு செலவு அதிகரிப்பு போன்ற முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

இந்த முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்ட சூழலில், பொருளாதாரம் இத்தகைய வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரசின் பொருளாதார முடிவுகளை நிதியமைச்சர் அறிவித்து வருவதும், அன்னிய முதலீடுகளை ஈர்க்க பன்னாட்டு முதலீட்டாளர்களை பிரதமரே தொடர்ந்து சந்தித்து வருவதும், அரசின் முயற்சிகள் குறையின்றி நடந்து வருவதை தெளிவாக்குகின்றன.


இருந்தும், பொருளாதாரம் போதுமான முதலீடுகள் இன்றி தொய்வை சந்திப்பதால், அனைத்து தரப்பிலும் அச்சமும், கவலையும் அதிகரித்து உள்ளது.உற்பத்தி மேலும் குறைந்தால், ஒட்டு மொத்த பொருளாதாரமும் சிதைந்து விடும் அபாயம் இருப்பதாக பொருளாதார விமர்சனங்கள் வருகின்றன. அடுத்து, அரசு என்ன செய்ய வேண்டும் என்ற விவாதங்களும் நடக்கின்றன.

பொருளாதார சீர்திருத்தங்களை அதிகரிப்பதே இந்த சூழல் விலகி, வளர்ச்சி திரும்ப ஒரே வழி. அரசு பல துறைகளில் இருந்து விலக வேண்டும். விமான துறை, கப்பல் போக்குவரத்து துறை, சரக்கு கன்டெய்னர் தொழில் மற்றும் எரிபொருள் வினியோகம் ஆகிய துறைசார் அரசு நிறுவனங்கள் விற்கப்பட உள்ளன.இந்த நிறுவன விற்பனை வெற்றிகரமாக நடந்தால், மேலும் பல நிறுவனங்களை விற்க முடியும்.

அரசு சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றால்,அது பன்னாட்டு முதலீடுகளை வெகுவாக ஈர்க்கும். சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்ய முன்வரும். பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் பக்கம் அதிக நாட்டம் செலுத்தினால், அதுவே உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை மேலும் பெருக வழி செய்யும்.

முதலீட்டு சூழலை மாற்றினால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி மீண்டும் உயரும். அதை அரசு தெளிவாக உணர்கிறது. மிகுந்த கவனத்துடன் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.நாட்டின் முதலீட்டு சூழல், பணப் புழக்கம் மற்றும் கடன் வட்டி விகிதங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பது, வளர்ச்சி திரும்ப பெரிதும் உதவும்.

உலக நாடுகளில் இந்தியாவை பற்றிய பொருளாதார பார்வையை, இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து சரியாக வகுத்தால், அது நம் நாட்டிற்கு வரும் பெரும் முதலீடுகளாக வெளிப்படும்.

மூலக்கதை