ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு

தினகரன்  தினகரன்
ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு

புதுடெல்லி: காவல்துறை ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது.  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்பியை அந்த துறையின் உயர் அதிகாரியான ஐஜி.முருகன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரம் தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை தெலங்கானா போலீசார் விசாரிக்க மாற்றி அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக ஐஜி.முருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதித்து, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு கடந்த மாதம் 14ம் தேதி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்திருந்தது.   இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் எஸ்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதிகள் முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில் ஐஜி.முருகன் தொடர்பான பாலியல் வழக்கை வெளிமாநில அதிகாரிகள் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அப்போது தான் இதில் சரியான தீர்வு கிடைக்கும். இது தொடர்பான மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.   இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” இந்த விவகாரத்தில் ஐஜி. முருகன், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, மற்றும் தமிழக அரசு ஆகியோர் தொடர்ந்து அத்தனை மனுக்களையும் ஒன்றாக இணைத்து விரிவாக விசாரணையை நீதிமன்றம் மேற்கொள்ளும் என தெரிவித்து வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மூலக்கதை