மராட்டியத்தின் முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு என தகவல்

தினகரன்  தினகரன்
மராட்டியத்தின் முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: தேசியவாத காங்கிரஸ்சிவசேனாகாங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு என தகவல்

மும்பை: மராட்டியத்தின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டியளித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சரத்பவார் தெரிவித்துள்ளார். மராட்டியத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக பவார் தெரிவித்துள்ளார். உத்தவ் தலைமையில் கூட்டணி அரசு அமைப்பதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்து கடிதம் அளிப்பர் என்றும், துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்க உள்ளது என்று சரத்பவார் தெரிவித்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 3 கட்சிகளும் நாளை வெளியிட உள்ளன. பாஜ - சிவசேனா கட்சிகள் உறவு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் முறிந்ததால், கடந்த 12ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா தங்களது தலைமையில் ஆட்சி அமைக்க முயன்று வருகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுற்ற நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீட்டில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. அதில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்து விட்டதாகவும், இதற்கான முறையான அறிவிப்பு இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றும் மும்பையில் ஆலோசனை நடத்தப்பட்டது. மராட்டிய ஆளுநரின் பயணம் ரத்துமராட்டிய ஆளுநரின் வெளியூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோர வரலாம் என்பதால் ஆளுநரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே மகிழ்ச்சி3 கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக உத்தவ் தாக்கரே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மராட்டியத்தின் புதிய அரசு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நாளை பதில் கிடைக்கும் என்று உத்தரவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். நிதின்கட்கரி விமர்சனம்மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் சேர்ந்து ஆட்சியமைத்தாலும் நீண்டகாலம் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். 3 கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள் இருப்பதால் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது என்று நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை