மஞ்சு வாரியர் பட தலைப்பு: இயக்குனர் விளக்கம்

தினமலர்  தினமலர்
மஞ்சு வாரியர் பட தலைப்பு: இயக்குனர் விளக்கம்

திருமணத்திற்கு பின்பு திரையுலகை விட்டு விலகியிருந்த மலையாள நடிகை மஞ்சு வாரியரை தான் இயக்கிய 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் மூலம் மீண்டும் திரையுலகிற்கு அழைத்து வந்தவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சுமார் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு பிரதி பூவன்கோழி என்கிற படத்தில் நடித்து வருகிறார் மஞ்சு.

இந்த படத்திற்கு கதையை எழுதியுள்ளவர் பிரபல கதாசிரியர் ஆர்.உன்னி. இப்போது இந்த படத்தின் டைட்டிலில் ரசிகர்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு விளக்கம் அளித்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

அதாவது ரோஷன் ஆண்ட்ரூஸும், கதாசிரியர் உன்னியும் இணைந்து வேறு ஒரு படத்திற்காக கதையை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, தான் உருவாக்கி வைத்திருந்த வேறு ஒரு கதையை பேச்சுவாக்கில் கூறினாராம் ஆர்.உன்னி. இந்த கதை ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கும் ரொம்பவே பிடித்துப் போனதால் இந்த புதிய கதையை முதலில் படமாக எடுங்கள் என்று உற்சாகப்படுத்தினாராம். அதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்பதால் 'பிரதி பூவன்கோழி' என டைட்டில் வைத்தாராம் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

ஆனால் ஏற்கனவே இதே பெயரில் இதே கதாசிரியர் ஆர்.உன்னி, நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த நாவல் ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான ஒன்று. அதனால் தற்போது பிரதி பூவன்கோழி என்கிற பெயரில் இந்த படம் வெளியானால் ஒருவேளை அந்த நாவல்தான் படமாகிவிட்டதோ என ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து விடுவார்கள் என்கிற தனது அச்சத்தை இயக்குனரிடம் வெளிப்படுத்திராம் ஆர்.உன்னி.

அதனால் படம் வெளியாவதற்கு முன்பே, டைட்டில்கள் ஒன்றாக இருந்தாலும் அந்த நாவலில் இருக்கும் கதை வேறு, இந்த படத்தின் கதை வேறு என்று தான் முன்கூட்டியே விளக்கம் அளித்துவிடுவதாக உறுதி கூறியிருந்தாராம் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. சொன்னபடியே தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்து விளக்கமும் அளித்துவிட்டார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

மூலக்கதை