கொல்கத்தாவில் 2வது டெஸ்ட் : ‘பிளாக்’கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

தினகரன்  தினகரன்
கொல்கத்தாவில் 2வது டெஸ்ட் : ‘பிளாக்’கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

கொல்கத்தா: இந்தியா - வங்கதேச அணிகள் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது. இப்போட்டியின் தொடக்க விழாவிற்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதனிடையே காவல்துறையினர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சிலர் பிளாக்கில் விற்பனை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 40 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, கொல்கத்தா போலீஸ் இணை ஆணையர் (குற்றம்) முர்லிதர் சர்மா கூறுகையில், ‘‘மைதான பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட போது பிளாக்கில் டிக்கெட் விற்ற 6 பேர் சிக்கினர். அவர்களிடம் 40 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே கடந்த புதன்கிழமை, பிளாக்கில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 38 டிக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன’’ என்றார்.

மூலக்கதை