வார்னர் அபார சதம் ஆஸி. ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்
வார்னர் அபார சதம் ஆஸி. ரன் குவிப்பு

பிரிஸ்பேன்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆசாத் ஷபிக் 76, கேப்டன் அசார் அலி 39, ரிஸ்வான் 37, ஷான் மசூத் 27, யாசிர் ஷா 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 4, கம்மின்ஸ் 3, ஹேசல்வுட் 2, லயன் 1 விக்கெட் வீழ்த்தினர்.இரண்டாம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்துள்ளது (87 ஓவர்). டேவிட் வார்னர் - ஜோ பர்ன்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 222 ரன் சேர்த்து அசத்தியது. பர்ன்ஸ் 97 ரன் (166 பந்து, 10 பவுண்டரி) எடுத்து யாசிர் ஷா பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.வார்னர் 151 ரன் (265 பந்து, 10 பவுண்டரி), லாபஸ்ஷேன் 55 ரன்னுடன் (94 பந்து, 6 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, ஆஸி. அணி 72 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை