இந்திய வேகங்கள் அபார பந்துவீச்சு இந்திய வேகங்கள் அபார பந்துவீச்சு: இந்தியா முன்னிலை

தினகரன்  தினகரன்
இந்திய வேகங்கள் அபார பந்துவீச்சு இந்திய வேகங்கள் அபார பந்துவீச்சு: இந்தியா முன்னிலை

கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க பகல்/இரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்கதேச அணி 106 ரன்னில் ஆல் அவுட்டானது.இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் பகல்/இரவு டெஸ்ட் இது என்பதால், ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. இரு அணிகளுக்குமே இதுதான் முதல் பகல்/இரவு டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் சம்பிரதாய முறைப்படி மணியை ஒலித்து போட்டியை தொடங்கி வைத்ததுடன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள், இந்திய அணி முன்னாள் கேப்டன்களும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஷத்மன், இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ‘பிங்க்’ பந்தை பயன்படுத்தி இந்திய வேகங்கள் மிரட்டியதில் இம்ருல் 4 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் மோமினுல் ஹக், முகமது மிதுன், முஷ்பிகுர் ரகிம் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அணிவகுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த ஷத்மன் 29 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மகமதுல்லா 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, வங்கதேசம் 60 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. உறுதியுடன் விளையாடிய லிட்டன் தாஸ் 24 ரன் எடுத்த நிலையில் (27 பந்து, 5 பவுண்டரி) ஷமி வீசிய பவுன்சர் அவரது ஹெல்மெட்டை பதம் பார்க்க நிலைகுலைந்தார். அவர் காயம் காரணமாக ஓய்வு பெற, மாற்று வீரராக மிராஸ் களமிறங்கினார். அடுத்து வந்த நயீம் ஹசனுக்கும் பந்து ஹெல்மெட்டை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.நயீம் 19, இபாதத் 1, மிராஸ் 8 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் வெளியேறினர். ஷமி பந்துவீச்சில் அபு ஜாயித் டக் அவுட்டாக, வங்கதேச அணி 30.3 ஓவரிலேயே 106 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அல் அமின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் 5, உமேஷ் 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நயீம் ஹசனுக்கு பதிலாக தைஜுல் இஸ்லாம் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.  இந்திய அணி தொடக்க வீரர்களாக மயாங்க், ரோகித் களமிறங்கினர். மயாங்க் 14, ரோகித் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், புஜாரா - கேப்டன் கோஹ்லி இணைந்து 3வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்தனர். புஜாரா 55 ரன் எடுத்து (105 பந்து, 8 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது (46 ஓவர்). விராத் கோஹ்லி 59 ரன் (93 பந்து, 8 பவுண்டரி), ரகானே 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இந்திய அணி 68 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் வங்கதேச அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை