சையத் முஷ்டாக் டி20 மும்பையை வீழ்த்தியது தமிழகம்

தினகரன்  தினகரன்
சையத் முஷ்டாக் டி20 மும்பையை வீழ்த்தியது தமிழகம்

சூரத்: சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லீக் போட்டியில் ஹரி நிஷாந்த் - விஜய் ஷங்கர் அதிரடியில்  தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழத்தியது.  சூரத்தில் நேற்று நடைபெற்ற பி பிரிவு  ஆட்டத்தில்  மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதின.  மும்பை  20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது. பிரித்வி ஷா 30 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஷாம்ஸ் முலானி 73 ரன் (52 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தமிழக பந்துவீச்சில் சித்தார்த் 4, சாய் கிஷோர் 3, பெரியசாமி, முகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 122 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களம் கண்டது.  ஷாருக்கான் 17, அபராஜித் 0, கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். தமிழகம் 6 ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து தடுமாறிய நிலையில், ஹரி நிஷாந்த் - விஜய் ஷங்கர் இணைந்து 4வது விக்கெட்டுக்கு மும்பை பந்துவீச்சை சிதறடித்தனர். இவர்களின் அதிரடியால் தமிழகம் 13.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. நிஷாந்த் 73 ரன் (44 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சர்),  விஜய் ஷங்கர் 27 ரன்னுடன் (20 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்கமல் இருந்தனர். மும்பை அணியின் ஷாம்ஸ் முலானி 3 விக்கெட் வீழ்த்தினார். சூப்பர் லீக் சுற்றில் முதல் போட்டியில் கர்நாடகாவிடம்  தோல்வி அடைந்த தமிழகம், முதல் வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகள் பெற்றது. அடுத்து திங்கட்கிழமை நடக்கும்  போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

மூலக்கதை