வரவேற்பு! கீரை, காய்கறிக்கு ... உற்சாகத்தில் விவசாயிகள்

தினமலர்  தினமலர்
வரவேற்பு! கீரை, காய்கறிக்கு ... உற்சாகத்தில் விவசாயிகள்

சென்னை : கார்த்திகையில், சபரிமலை விரதம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் காரணமாக, பெரும்பாலானோர், அசைவ உணவுகளை தவிர்த்து, கீரை, காய்கறி உணவு வகையை விரும்புவதால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்ட சுற்றுவட்டாரங்களில், பெரும்பாலானோர், அசைவ உணவுகளை விரும்பி உட்கொள்கின்றனர். இதனால், அவற்றின் விலையும், உச்ச நிலையில் இருப்பது வழக்கம்.கார்த்திகை மாதத்தையொட்டி, பலரும் சபரிமலை செல்வதற்காக விரதம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அசைவ உணவுகளை தவிர்த்திடுவர். அவர்களது வீட்டில் உள்ளவர்களும் அவற்றை தவிர்ப்பது வழக்கம்.

இதனால், சில தினங்களாக, இறைச்சி வியாபாரம், 70 சதவீதம் குறைந்துள்ளதாக, வியாபாரிகள் கூறுகின்றனர். இதையடுத்து, சென்னை புறநகர் பகுதிகளில், விவசாயம் சூடுபிடித்துள்ளது. செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம், எராங்குப்பம், மேட்டுப்பாளையம், கிருஷ்ணாம்பேட்டை, பழைய பம்மதுகுளம், கோணிமேடு, சரத்கண்டிகை கிராமங்களில், அரைகீரை, சிறுகீரை, பாளை கீரை, வெண்டை, கத்தரி, பாகற்காய் மற்றும் காராமணி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.

1 கட்டு கீரை, 15 ரூபாய், 1 கிலோ வெண்டைக்காய், 22 ரூபாய் வீதம் விற்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'மக்களிடையே கீரை, காய்கறிகளுக்கான வரவேற்பு, மார்கழி மாதம் வரை தொடரும். மிதமான மழை பெய்தால், பெரிய அளவில் கீரை பயிர்கள் சேதமடையாது. 'பலத்த மழை என்றால், பயிர்கள் மூழ்கி முழுமையாக சேதமடைந்து விடும்' என்றனர்.

மூலக்கதை