நுணுக்கம் அறிய! சி.ஐ.ஐ., குழுவினர், மைசூரு 'விசிட்' ... ஆடை உற்பத்தி மேம்பட வாய்ப்பு

தினமலர்  தினமலர்
நுணுக்கம் அறிய! சி.ஐ.ஐ., குழுவினர், மைசூரு விசிட் ... ஆடை உற்பத்தி மேம்பட வாய்ப்பு

திருப்பூர் : சி.ஐ.ஐ.,-ல் அங்கம் வகிக்கும் திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் 22 பேர் குழு, மைசூருவில், தொழிற்சாலைகளை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சிலில், ஏராளமான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உறுப்பினராக உள்ளன. சிறந்த உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, தொழில் துறையினரை, வெளிமாநிலம், வெளிநாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களை பார்வையிடச் செய்கிறது, சி.ஐ.ஐ.,அவ்வகையில், தற்போது சி.ஐ.ஐ., மாவட்ட கவுன்சில் துணை தலைவர் பாலன் தலைமையிலான ஆடை உற்பத்தி துறையினர் 22 பேர் அடங்கிய குழுவினர், நேற்று மைசூரு சென்றனர்.

அங்குள்ள உணவுப்பொருள் நிறுவனங்களின் செயல்பாடுகள்; செலவை குறைத்து உற்பத்தியை பெருக்குவதற்கு கையாளும் நுட்பங்கள் குறித்த விவரங்களை இக்குழுவினர் சேகரித்துவருகின்றனர்; மைசூரு சுற்றுப்பயணம் முடித்து, இந்த குழு இன்று திருப்பூர் திரும்ப உள்ளது.சி.ஐ.ஐ., மாவட்ட கவுன்சில் தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:சிறந்த உற்பத்தி நுட்பங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்காக, திருப்பூரிலிருந்து, தொழில்முனைவோர் குழுவினர், மைசூரு சென்றுள்ளனர்.

அங்கு, இரண்டு உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனங்களை பார்வையிடுகின்றனர். இந்த குழுவினர் திருப்பூர் திரும்பியபின், மைசூரு நிறுவனங்கள் கையாளும் உற்பத்தி நுட்பங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.பல்வேறு நிறுவனங்கள் கையாளும் சிறந்த நுட்பங்களை கண்டறிந்து செயல்படுத்துவதன்மூலம், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை