தமிழக அணி வெற்றி | நவம்பர் 22, 2019

தினமலர்  தினமலர்
தமிழக அணி வெற்றி | நவம்பர் 22, 2019

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் நடக்கும் சையது முஷ்தாக் அலி ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடருக்கான ‘பி’ பிரிவு ‘சூப்பர் லீக்’ போட்டியில் தமிழகம், மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு மணிமாறன் சித்தார்த் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ கேப்டன் சூர்யகுமார் யாதவ் (0), ஸ்ரேயாஸ் ஐயர் (1), சித்தேஷ் லத் (1), பிரித்வி ஷா (30) சிக்கினர். பொறுப்பாக ஆடிய ஷாம்ஸ் முலானி (73) அரைசதம் கடந்தார்.

மும்பை அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்தது. தமிழகம் சார்பில் சித்தார்த் 4, சாய் கிஷோ 3 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு ஷாருக்கான் (17) சுமாரான துவக்கம் தந்தார். பாபா அபராஜித் (0), கேப்டன் தினேஷ் கார்த்திக் (4) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ஹரி நிஷாந்த் அரைசதம் கடந்த வெற்றிக்கு வித்திட்டார்.

தமிழக அணி 13.5 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிஷாந்த் (73), விஜய் சங்கர் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை