தென்காசி புதிய மாவட்டம் துவக்கினார் முதல்வர்

தினமலர்  தினமலர்
தென்காசி புதிய மாவட்டம் துவக்கினார் முதல்வர்

தென்காசி:தென்காசி புதிய மாவட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.
'திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து, தென்காசியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும்' என, முதல்வர் ஜூலை, 18ல் அறிவித்தார்.

துவக்க விழா, நேற்று தென்காசியில் நடந்தது.தலைமைச் செயலர் சண்முகம் வரவேற்றார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா பேசினர்.முதல்வர் இ.பி.எஸ்., ரூ28.67 கோடியில், 45 பணிகளை துவங்கி வைத்து, 12.16 கோடி ரூபாயில், ஆறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் பேசியதாவது:



இப்பகுதி மக்களின், 33 ஆண்டு கோரிக்கையை ஏற்று, தென்காசி புதிய மாவட்டம் அமைகிறது. இது, தமிழகத்தின், 33வது மாவட்டம். மாவட்ட பிரிப்புக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. சிலர் உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். எந்த இடையூறு வந்தாலும் தேர்தல் நடக்கும்.தென்காசி மாவட்டத்தில், ராமநதி - ஜம்புநதி இணைப்பு திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.

செண்பகவல்லி அணை திட்ட பிரச்னையும் தீர்க்கப்படும். தாமிரபரணி - நம்பியாறு - கருமேனி ஆறுகள் இணைப்பு திட்டம், 2020 டிசம்பரில் முடிக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

சட்டசபை தொகுதிகள்

தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ஆலங்குளம், வாசுதேவநல்லுார் சட்ட சபை தொகுதிகள், தென்காசி மாவட்டத்தில் அமைகின்றன.தென்காசி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டங்களும், தென்காசி, ஆலங்குளம், செங்கோட்டை, கடையநல்லுார், சிவகிரி,
வீரகேரளம்புதுார், சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கலெக்டராக, அருண் சுந்தர் தயாளன், எஸ்,பி.,யாக சுகுணா சிங் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2 அரசு கலைக்கல்லூரிகள்



தென்காசி மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான செண்பகவல்லி அணைக்கட்டு திட்டம் கேரள அரசுடன் பேசி செயல்படுத்தப்படும். கடையம் அருகே ராமநதி, ஐம்புநதி திட்டம் செயல்படுத்தப்படும். சங்கரன்கோவிலில் இருபாலர் பயிலும் அரசு கலைக்கல்லூரி 8.60 கோடி ரூபாயிலும், ஆலங்குளத்தில் 9.13 கோடியில் மகளிர் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்றார்.

எதிர்த்த மனு தள்ளுபடி



சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுப்ரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்து, நவ., 12ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பான ஆட்சேபனைகளை அரசு பரிசீலிக்கவில்லை.

வேலுார் மாவட்டத்தை பிரித்தது போல், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில் என, மூன்று மாவட்டங்களாக பிரிக்கலாம். சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் உள்ளது. கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை உட்பட பல்வேறு தொழில்கள் உள்ளன.தாலுகா வாரியாக கருத்துக் கேட்பு நடத்தி, சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு,
மாவட்டம் அமைக்க வேண்டும். தென்காசி மாவட்டம் அமைக்க, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு, 'இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, உத்தரவிட்டது.

மூலக்கதை