இழப்பு தடுக்க வழி! அரசு போக்குவரத்து கழகத்தில்... வழித்தடங்கள் மாற்றம், நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
இழப்பு தடுக்க வழி! அரசு போக்குவரத்து கழகத்தில்... வழித்தடங்கள் மாற்றம், நீட்டிப்பு

கோவை : கோவையில் இயக்கப்படும் அரசு பஸ்களில் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கில், 89 வழித்தடங்களில், வழித்தட மாற்றம், நீட்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை, அரசு போக்குவரத்து கழகம் மேற்கொண்டுள்ளது.

கோவை நகரில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 14 டெப்போக்கள் உள்ளன. மொத்தம், 7,673 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், கண்டக்டர், டிரைவர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள் அடங்குவர். நகர்ப்பகுதியில் மட்டும், 217 வழித்தடங்கள் உள்ளன. இதில், 773 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஒவ்வொரு பஸ்சுக்கும், ஒரு 'சிங்கிள்' என்றழைக்கப்படும் பயண நேரம், 50 நிமிடமாக இருந்தது. தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல், வாகனப்பெருக்கம், சாலை மோசம் போன்ற காரணங்களால், ஒரு மணி நேரம், 10 நிமிடமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இச்சூழலில், வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வழித்தடங்கள், குறைவான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இயக்கப்படும் பஸ்கள், ஒரே வழித்தடத்தில் பல எண்ணிக்கையில் இயக்கப்படும் பஸ்கள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு, ஒரு மாதம் வழித்தட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.வருவாய் குறைவாக உள்ள வழித்தடங்களை மேம்படுத்தும் நோக்கில், வழித்தடங்களில் சில மாற்றங்களையும், நீட்டிப்பையும் செய்து வருவாய் அதிகரிக்கப்பட்டு உள்ளன. சில பஸ்கள், தனியார் பஸ்களின் நேரத்துக்கு இணையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இத்தகைய மாற்றங்களை, அரசு போக்குவரத்து கழகம் மேற்கொண்டுள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'கோவை கோட்டத்தை பொறுத்தவரை, நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. வருவாய் மற்றும் செலவு ஈடுகட்டப்பட்டு, தொடர்ந்து சமநிலையில் நீடிக்கிறது. வருவாயை பெருக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.விபத்தின்றி பஸ் ஓட்டினால் விருது டீசல் சிக்கனத்தை வலியுறுத்தி, டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு போட்டி நடத்தி பரிசு வழங்கப்படுகிறது.

விபத்தின்றி சிறப்பாக பஸ் ஓட்டுபவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். அதிக வருவாய் ஈட்டும் கண்டக்டருக்கு விருது வழங்கப்படுகிறது. டிரைவருக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க, அந்தந்த டெப்போவில் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.

மூலக்கதை