முதியவரின் சிறுநீரை உறிஞ்சி உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்

தினமலர்  தினமலர்
முதியவரின் சிறுநீரை உறிஞ்சி உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்

குவாங்சோ, விமானத்தில் சிறுநீரை உறிஞ்சி முதியவரின் உயிரை காப்பாற்றிய சீன டாக்டர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.தெற்கு சீனாவின் குவாங்சோ நகரில் இருந்து நியூயார்க்கிற்கு சென்ற விமானத்தில் முதியவர் ஒருவருக்கு திடீரென்று உடல்நலமின்மை ஏற்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த டாக்டர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாவ் ஆகியோர் முதியவரின் உடல்நிலையைப் பரிசோதித்தனர்.சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த டாக்டர்கள் விமானத்தில் கிடைத்த ஆக்ஸிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் அமைப்பை உருவாக்கினர். ஆனால் நோயாளியை உயரத்தில் வைத்தால் மட்டுமே சிறுநீர் வெளியேறும் என்ற நிலை இருந்தது.சிறுநீர் வெளியேறினால் மட்டுமே முதியவரை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் யாரும் எதிர்பார்க்காத அந்த செயலை செய்தார் ஜாங்ஹாங். நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றத் தொடங்கினார். 800 மில்லி சிறுநீரை 37 நிமிடங்கள் உறிஞ்சி வெளியேற்றினார் . இந்த சிகிச்சைக்குப் பிறகு முதியவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். விரைந்து செயல்பட்டு முதியவரை காப்பாற்றிய டாக்டரை மக்கள் பாராட்டி வருகின்றனர். அந்த இரு டாக்டர்களுக்கும் தலா 14 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அவர்கள் வேலைபார்க்கும் ஹைனன் மருத்துவமனை அறிவித்துள்ளது.மருத்துவமனையின் தலைவர் சூ ஆண்டிங் கூறுகையில், ஜாங்கின் அர்ப்பணிப்பு மனப்பான்மை குறித்து மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது, மேலும், ஜாங் ஒரு சர்வதேச மருத்துவ மன்றத்திற்காக நியூயார்க் சென்றுள்ளதால் அடுத்த வாரம் திரும்பி வருவார், அவர் திரும்பிய பிறகு மருத்துவமனை அவருக்கு விருதை வழங்கும் ,என்றார்.

மூலக்கதை