இலங்கையில் இடைக்கால அமைச்சரவை ராஜபக்சே சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்பு

தினமலர்  தினமலர்
இலங்கையில் இடைக்கால அமைச்சரவை ராஜபக்சே சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்பு

கொழும்பு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 16 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையை நியமித்துள்ளார். இதில் தன் சகோதரர்களுக்கு ராணுவம், நிதி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். தமிழர்கள் இருவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டது.ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக முன்னாள் அதிபரும் கோத்தபயவின் மூத்த சகோதரருமான மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றார். இலங்கையின் அடுத்த பார்லிமென்ட் தேர்தல் 2020ல் தான் நடக்கவுள்ளது. எனவே அதுவரை நிர்வாகத்தை நடத்துவதற்கு வசதியாக 16 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார்.இதில் பிரதமர் மகிந்தாவுக்கு ராணுவம் மற்றும் நிதி இலாகாவும்; அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்சேவுக்கு 77, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையும் ஒதுக்கப்பட்டன.இவர்கள் தவிர மேலும் 14 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தினேஷ் குணவர்த்தனே 70, வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றார். பவித்ரா வன்னியராச்சி என்ற பெண்ணுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த அமைச்சரவையில் இலங்கை தமிழர்களான ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழில் கட்டமைப்பு துறை அமைச்சராகவும்; டக்ளஸ் தேவானந்தா மீன்வளத்துறை அமைச்சராகவும் இடம் பெற்றுள்ளனர்.

மூலக்கதை