இந்திய ‘வேகங்கள்’ அபாரம் * 106 ரன்னில் சுருண்டது வங்கம் | நவம்பர் 22, 2019

தினமலர்  தினமலர்
இந்திய ‘வேகங்கள்’ அபாரம் * 106 ரன்னில் சுருண்டது வங்கம் | நவம்பர் 22, 2019

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, இந்திய மண்ணில் முதன் முறையாக துவங்கியது. இதில் ‘பிங்க்’ நிற பந்து பயன்படுத்தப்பட்டது.

‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மோமினுல் ஹக், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. வங்கதேச அணியில் தய்ஜுல், மெகிதி நீக்கப்பட்டு அல் அமின், நயீம் சேர்க்கப்பட்டனர். 

இஷாந்த் அபாரம்

வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ், ஷாத்மன் இஸ்லாம் ஜோடி துவக்கம் தந்தது. இந்திய ‘வேகங்கள்’ துவக்கத்திலேயே போட்டுத் தாக்கினர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த போதும் வங்கதேச வீரர்கள் ரன்கள் எடுக்க திணறினர். 15 பந்தில் 4 ரன் எடுத்த இம்ருலை, இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 

உமேஷ் ‘இரண்டு’

போட்டியின் 11வது ஓவரில் இஷாந்த் ‘இரட்டை’ அடி கொடுத்தார். முதல் பந்தில் மோமினுல் (0), ரோகித் சர்மாவின் அசத்தல் ‘கேட்ச்சில்’ திரும்பினார். 3வது பந்தில் முகமது மிதுன் (0) போல்டானார். மறுபக்கம் தன் பங்கிற்கு மிரட்டிய ஷமி, முஷ்பிகுரை ‘டக்’ அவுட்டாக்கினார். 

சற்று தாக்குப்பிடித்த ஷாத்மன், 29 ரன்னுக்கு கிளம்பினார். பின் வந்த மகமதுல்லா 6 ரன் எடுக்க, லிட்டன் தாஸ் (24), ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். எபாதத் (1), மாற்று வீரராக வந்த மெகிதி ஹசன் (8), அபு ஜயேத் (0) விரைவில் வீழ்ந்தனர். 

வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் சாய்த்தார். உமேஷ் 3, முகமது ஷமி 2 விக்கெட் சாய்த்தனர்.

 

பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக கோல்கட்டா வந்தார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா. இரு அணி வீரர்களையும் கங்குலி அறிமுகம் செய்து வைத்தார். தேசிய கீதம் பாடப்பட்டதும், ஈடன் கார்டன் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ராட்சத மணியை, ஷேக் ஹசினா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடித்து, போட்டியை துவக்கி வைத்தனர். 

 

முகமது ஷமி வீசிய போட்டியின் 21வது ஓவரை வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் எதிர்கொண்டார். இதன் 3வது பந்து பவுன்சராக சென்று லிட்டன் தாஸ் ‘ஹெல்மெட்’ முன்பகுதியில் பலமாக தாக்கியது. சற்று ‘ரிலாக்ஸ்’ ஆன பின் பேட்டிங்கை தொடர்ந்த அவர், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். பின் அடுத்து 6 பந்துகளை சந்தித்த லிட்டன் தாஸ், அம்பயரிடம் சென்று பேசினார். பிறகு ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார். 

மூலக்கதை