சச்சின்... சச்சின் * ரசிகர்கள் உற்சாகம் | நவம்பர் 22, 2019

தினமலர்  தினமலர்
சச்சின்... சச்சின் * ரசிகர்கள் உற்சாகம் | நவம்பர் 22, 2019

கோல்கட்டா: இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, இந்திய மண்ணில் முதன் முறையாக துவங்கியது. 

உணவு இடைவேளையின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின், கும்ளே, லட்சுமண், ஹர்பஜன் சிங் இணைந்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 2001ல் இங்கு நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது குறித்து பேசினர். 

அப்போது ரசிகர்கள் ‘சச்சின்... சச்சின்’ என உற்சாகமாக கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது லட்சுமண் கூறுகையில்,‘‘2001 டெஸ்ட் மூன்றாவது நாளில் சச்சின், கங்குலி அவுட்டான பின், மைதானம் காலியானது. பின் நானும், டிராவிட்டும் இணைந்து ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்து அணியை மீட்டோம். அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,’’ என்றார்.

சச்சின் கூறுகையில்,‘‘நாங்கள் ‘பாலோ ஆன்’ ஆன பின், மீண்டும் பேட்டிங்கை துவங்கிய போது, அடுத்து இரண்டரை நாட்கள் மீதமிருந்தன. லட்சுமண் 3வது, டிராவிட் 6வது இடத்தில் பேட்டிங் செய்வது என கங்குலி முடிவெடுத்தார். இவர்கள் இணைந்து பேட்டிங் செய்த போது, ‘டிரசிங் ரூமில்’ ஒருவரும் அசையவில்லை. பின் ‘ஐஸ் பேக்’, ‘ கூல் டிரிங்ஸ்’ என அனைத்தையும் டிராவிட், லட்சுமணுக்காக தயாராக வைத்திருந்தோம். உண்மையில் இது அதிசயத்தக்க ‘பார்ட்னர்ஷிப்’ ஆக அமைந்தது. இவர்களது சிறப்பான பேட்டிங்கிற்கு அடுத்து, ஹர்பஜனும், ஜாகிர் கானும் நன்றாக பந்து வீசினால் போட்டியில் வென்று விடலாம் என நம்பிக்கை வந்து விட்டது,’’ என்றார்.

கும்ளே கூறுகையில்,‘‘நாங்கள் விளையாடிய நாட்களுக்குப் பின், இப்போது தான் முதன் முறையாக அனைவரும் இணைந்துள்ளோம். இதற்கு கங்குலிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்,’’ என்றார்.

ஹர்பஜன் சிங் கூறுகையில்,‘‘ ஈடன் கார்டன் மைதானம் எனது வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இங்கு தான் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினேன். இருமுறை ஐ.பி.எல்., கோப்பை வென்றோம். எப்போது இங்கு வந்தாலும் சொந்த மண்ணுக்கு வருவது போன்ற உணர்வு ஏற்படும். சச்சின், கும்ளே, லட்சுமண் போன்ற ஜாம்பவான்களுடன் உட்கார்ந்திருப்பது போன்ற போஸ்டர் என் அறையில் உள்ளது. இப்போது அவர்களுடன் இங்கு வந்துள்ளேன். இது வியக்கத்தக்கது. இவர்களைப் போன்ற ஜாம்பவான்கள் இல்லை என்றால் 100 டெஸ்டுக்கும் மேல் நான் விளையாடி இருக்க முடியாது,’’ என்றார்.

மூலக்கதை