ரயில்வே பணிகளுக்கு அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரூ. 50 லட்சம் கோடி நிதிதேவை; எனினும் ரயில் துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு

தினகரன்  தினகரன்
ரயில்வே பணிகளுக்கு அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரூ. 50 லட்சம் கோடி நிதிதேவை; எனினும் ரயில் துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு

டெல்லி : ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனையை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அடுத்த 12 ஆண்டுகளுக்கு சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவையாக இருப்பதாக கூறினார். இந்த நிதியை தனியார் நிறுவனங்கள் வழங்க முன்வந்துள்ளதாக கூறிய அவர், எனினும் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் ரயில்வேயின் வணிகரீதியான மற்றும் ரயிலுக்குள் சில சேவைகளை மட்டுமே தனியார் மூலம் அவுட்சோர்சிங் முறையில் பெறப்படுவதாக பியுஷ் கோயல் தெரிவித்தார்.இதன்மூலம், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என்றார். மத்திய அரசின் மற்றும் மக்களின் சொத்தாக ரயில்வே நீடிக்கும் என்றும் அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

மூலக்கதை