சகோதரர்களுக்கு முக்கிய பதவி: கோத்தபயா தாராளம்

தினமலர்  தினமலர்
சகோதரர்களுக்கு முக்கிய பதவி: கோத்தபயா தாராளம்

கொழும்பு: இலங்கையில் இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்று கொண்டது. இதனை தொடர்ந்து தனது சகோதரர்கள் மகிந்த மற்றும் சமல் ராஜபக்சேவுக்கு முக்கிய பொறுப்புகளை அதிபர் கோத்தபய அளித்துள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே நேற்று முன்தினம்(நவ.,20) பதவி விலகினார். அதை தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பரிதமராக பதவியேற்றார். அவருக்கு தம்பி கோத்தபயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2005 முதல் 2015 வரை அதிபராக இருந்தவர் மகிந்த. அப்போது கோத்தபயா ராணுவ அமைச்சராக இருந்தார். தற்போது, அண்ணன் பிரதமராகவும், தம்பி அதிபராகவும் உள்ளனர்.


இந்நிலையில் இலங்கையின் இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்று கொண்டது. அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், அதிபரின் மற்றோரு சகோதரர் சமல் ராஜபக்சே, நிமல் ஸ்ரீபாலா, ஆறுமுகம் தொண்டைமான், டக்ளஸ் தேவானந்தா, பவித்ரா தேவி, பந்துலா குணவர்த்தனே, ஜனக பந்தாரா, துலஸ் அலபெருமா, விமல் வீரவனசா, மகிந்த அமரவீரா, சந்திரசேனா, ரமேஷ் பதிரானா, பிரசன்னா ரணதுங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
இதனையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு, நிதித்துறை, பொருளாதார விவகாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் சப்ளை மற்றம் புத்த மத விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சகோதரர் சமல் ராஜபக்சேவிற்கு, விவசாயம், நீர்பாசனம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சகோதரர் பசிலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக அவர், பின்னால் இருந்து, ஆலோசகராக செயல்படுவார் என இலங்கை அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சகோதரர்களுக்கு முக்கிய பதவி அளிக்கப்பட்டது என்பது, இலங்கையின் ஒட்டு மொத்த அதிகாரமும் ராஜபக்சே குடும்பத்தின் கைகளில் சென்றுவிட்டதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலக்கதை