ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை பெறுவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படாது: அமெரிக்க அதிகாரி தகவல்

தினகரன்  தினகரன்
ரஷ்யாவிடமிருந்து எஸ்400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை பெறுவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படாது: அமெரிக்க அதிகாரி தகவல்

வாஷிங்டன்: எதிர்பபையும் மீறி ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை பெறுவதால் இந்தியா மீது பொருளாதார தடை ஏதும் விதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கு அந்நாட்டுடன் பிரதமர் நரேந்திர மோடி அரசு கடந்த 2018ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி 40,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு, இந்தியா வந்தடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற சூழலில், அந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை தங்கள் எதிர்ப்பை மீறி இந்தியா பெறுவதற்காக அதன்மீது பொருளாதார தடை விதிக்கப்படாது என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படாதபோது, அதுகுறித்த பேச்சுக்கு இடமில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்தியா தனது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்றாலும், ஒருபுறத்தில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு, மறுபுறத்தில் ரஷ்யா உளவு பார்க்க துடிக்கும். எனவே, இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ள துருக்கி விவகாரத்திலிருந்து, இந்தியா முற்றிலும் மாறுபடுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியா போன்று அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை மீறி ரஷ்ய நாட்டிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியது. இதனையடுத்து, துருக்கிக்கு வழங்கவிருந்த போர் விமானங்களில் ஒன்றான எஃப்-35 ரக போர் விமானத்தை வழங்க முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை