எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு: ஆர்.ஜே.பாலாஜி

தினமலர்  தினமலர்

ஆர்.ஜே., எனப்படும், ரேடியோ ஜாக்கியாக இருந்து, நடிகராகி, இன்று இயக்குனராக உயர்ந்துள்ள, ஆர்.ஜே.பாலாஜியுடன் பேசியதிலிருந்து:

நயன்தாரா நடிக்கும் படத்திற்கான கதையை எழுதி, அவருடன் நடிப்பது குறித்து?

இப்போது நிறைய பேய் படங்கள் தான் வருகின்றன. நிம்மதியாக துாங்க கூட முடியவில்லை. கனவிலும் பேய் தொல்லை. அதனால், ராம நாராயணன் பாணியில், நல்ல பக்தி படம் ஒன்றை தரலாமே என நினைத்தேன். இதற்காக கதை ஒன்றை எழுதினேன். அந்த கதையை பலரிடம் கூறிய போது, நயன்தாராவும் கேள்விப்பட்டு, என்ன கதை என, கேட்டார். கதையை கேட்டதும், அவருக்கு பிடித்து விட்டது. நிச்சயமாக நடிக்கிறேன் என, சம்மதித்தார். நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். மூக்குத்தி அம்மன் என பெயரிட்டுள்ளோம். படப்பிடிப்பு குமரியில், அம்மன் கோவிலில் பூஜையுடன் துவங்கி நடைபெற உள்ளது. இந்த படத்தில் பெரிய கருத்து இருக்கிறது. அதை நயன்தாரா சொன்னால் எடுபடும். சத்தியமாக இது சாமியை கிண்டல் செய்யும் படமல்ல.

விரதமிருந்து படத்தை துவக்குகிறீர்களாமே?

படத்திற்காக படக்குழு மட்டுமின்றி, நயன்தாராவும் விரதம் இருக்கிறார். இதற்கு முன் ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்த போதும், நயன்தாரா விரதமிருந்து நடித்திருந்தார்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எல்லா கடவுளையும் கும்பிடுவேன். வீட்டை விட்டு செல்லும் போது, அந்த வேலை நன்றாக நடக்க வேண்டும் என, எல்லா கடவுளையும் கும்பிட்டு விட்டுதான் செல்வேன்.

உங்களின் படைப்புகளில் எதை பின்பற்ற நினைக்கிறீர்கள்?

என் படங்களில், மது குடிப்பது போலவோ, சிகரெட் புகைப்பது மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை கீழே போட்டு எடுக்க வைப்பது போன்ற காட்சிகள் எதுவும் இருக்காது. எல்.கே.ஜி படத்தை பார்த்தாலே தெரியும். எந்த மாதிரி படம் கொடுத்தால் நம்மை ரசிப்பர் என்றும், எனக்கான எல்லை எது என்றும் தெரியும்.

நீங்கள் தொகுத்து வழங்கப்போகும் இணைய ஆடியோ நிகழ்ச்சியான, மைன்ட் வாய்ஸ் நிகழ்ச்சியை பற்றி சொல்லுங்கள்?

பேச மறுக்கிற, மறக்கிற விஷயத்தை, உள்ளுக்குள் இருக்கிறதை நேர்மையாக பேசும் விஷயம் தான், மைன்ட்வாய்ஸ். ஒரு பெரிய பாதிப்பு நடக்கிற வரை யாருமே அதைப்பற்றி பேசுவதே இல்லை. நடந்தபின் அதைப்பற்றி நான்கு நாள் பேசுவோம். வரும் முன் காப்போம் என்றில்லாமல், வந்த பின் பார்ப்போம் என இருக்கிறது. பெரிதாக பேசப்படாத விஷயங்களை, உள்ளது உள்ளபடி பேசுவது தான், இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

ஆர்.ஜே., நடிகர், வர்ணனையாளர், இயக்குனர் என பல பணிகளில் ஈடுபடுவது ஏன்?

ஷாருக்கான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். நடிகராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக என பல பணிகளில் ஈடுபடுகிறார். அவர் அளவுக்கு நான் இல்லை. நான் ரொம்ப சாதாரண ஆள். எந்த வேலை செய்தாலும் அதை நன்றாக செய்ய வேண்டும் என நினைப்பேன். எனக்கு எவ்வளவு வயது ஆனாலும், ஆர்.ஜே பணியை மட்டும் விட மாட்டேன்.

மூலக்கதை