கர்நாடகாவில் பலாத்கார வழக்கு பதிவு செய்த போதே சாமியார் நித்தியானந்தா வெளிநாடுக்கு தப்பினார்: குஜராத் போலீஸ் தகவல்

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் பலாத்கார வழக்கு பதிவு செய்த போதே சாமியார் நித்தியானந்தா வெளிநாடுக்கு தப்பினார்: குஜராத் போலீஸ் தகவல்

அகமதாபாத்: ‘நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பியோடி விட்டார். தேவைப்பட்டால், அவரை முறைப்படி கைது செய்ய நடவடிக்கை எடுப்போம்,’ என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் குழந்தைகளை கடத்தி, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக சாமியார் நித்தியானந்தா மீது கடந்த புதன் கிழமை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  இது குறித்து அகமதாபாத் எஸ்.பி ஆசாரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடகாவில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அவர் நாட்டை விட்டு தப்பி விட்டார். தேவைப்பட்டால் அவரை குஜராத் போலீஸ் முறைப்படி காவலில் எடுக்கும். அவர் இந்தியா வந்தால், நாங்கள் நிச்சயம் அவரை கைது செய்வோம்,’’ என்றார். இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி கமாரியா கூறுகையில், ‘‘நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து ஒரு பெண் மாயமானதாக அவரது தந்தை ஜனார்த்தன  சர்மா அளித்த புகரின் பேரில் வழக்கு பதிவு செய்து  விசாரித்து  வருகிறோம். வலுவான ஆதாரங்கள் கிடைத்தால் நித்தியானந்தாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்,’’ என்றார்.  குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் நித்தியானந்தாவின் 2 பெண் சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது,’’ என்றார்.ஆசிரமத்துக்கு நிலம் குத்தகை அறிக்கை கேட்டுள்ளது சிபிஎஸ்இஅகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு, பள்ளி நிலம் ஒன்றை குஜராத் கல்வி துறை குத்தகைக்கு அளித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி குஜராத் கல்வித்துறையை சிபிஎஸ்இ கேட்டுள்ளது.

மூலக்கதை