வேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்

தினகரன்  தினகரன்
வேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்

புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியாருக்கு மட்டுமே விற்கப்படும். ஐஓசி மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் வாங்க அனுமதி கிடையாது என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களை விற்று மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது. நடப்பு ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த வகையில், மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, இந்தியாவின் 2வது பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் ெபட்ரோலியம் நிறுவனம் நிறுவனத்தை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறியதாவது: தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசின் வேலையல்ல என்ற தெளிவான பார்வையுடன்தான் 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறோம். தனியார் மயம் ஆக்குவதால் போட்டி அதிகரித்து பொருட்கள் மற்றும் சேவைகள் மலிவு விலையில் கிடைக்கும். இதற்கு தொலைத்தொடர்பு, சிவில் விமான போக்குவரத்து போன்ற சில துறைகளை உதாரணமாக கூறலாம். இதன்படிதான் நேற்றும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். கடந்த ஆண்டு, இந்துஸ்தான் பெட்ரோலியத்தில் மத்திய அரசு வைத்திருந்த பங்குகள் அனைத்தும், மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு விற்கப்பட்டது. இதுபோல், பாரத் பெட்ரோலியத்தில் மத்திய அரசு வைத்துள்ள 53.29 சதவீதத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வாங்க அனுமதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, ‘‘பாரத் பெட்ரோலியத்தை தனியார் மயம் ஆக்குவது இந்த நிதியாண்டுக்குள் முடிந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. பங்கு விற்பனை குறித்த விவரங்கள் முடிவு செய்யப்படும். நான் ஏற்கெனவே கூறியது போல, வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசின் வேலையல்ல. இதன்படிதான்  எதிர்கால திட்டங்கள், நடவடிக்கைகள் இருக்கும்’’ என பிரதான் தெரிவித்தார்.

மூலக்கதை