தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

தினமலர்  தினமலர்
தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

ஐதராபாத்: தெலுங்கானா போக்குவரத்து கழக ஊழியர்கள், 47 நாட்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை, 'வாபஸ்' பெறுவதாக அறிவித்துள்ளனர். அதேநேரத்தில், தங்கள் மீதான, 'டிஸ்மிஸ்' நடவடிக்கையை, அரசு கைவிட வேண்டும் என்றும், அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.


ஆலோசனை


தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 40 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுடன் பேச்சு நடத்த, மாநில அரசு முன்வரவில்லை. இதற்கு பதிலாக, போராட்டத்தில் ஈடுபட்ட, 48 ஆயிரம் ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தது. தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் உதவியுடன், அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஸ்கள், ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து ஊழியர்கள், தீக்குளித்து தற்கொலை செய்தனர். போராட்டம் காரணமாக, அரசுக்கு, 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கூடி, ஆலோசனை நடத்தினர்.


நடவடிக்கை


இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அஸ்வதமா ரெட்டி கூறியதாவது: கடந்த, 47 நாட்களாக மேற்கொண்டிருந்த போராட்டத்தை, பொதுமக்களின் நலன் கருதி, வாபஸ் பெறுகிறோம். அதேநேரத்தில், எங்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையை, எந்த நிபந்தனையுமின்றி, அரசு கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். ஆனாலும், இவர்களது கோரிக்கையை ஏற்பது குறித்து, அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.

மூலக்கதை