ரூ.2.25 கோடி!குளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்

தினமலர்  தினமலர்
ரூ.2.25 கோடி!குளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்

பல்லாவரம்:பல்லாவரம் நகராட்சியில் உள்ள மூன்று குளங்களை, நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் துார் வாரி ஆழப்படுத்தும் திட்டத்திற்கு, அரசின் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை, பல்லாவரத்தில், ஏராளமான நீர்நிலைகள் இருந்தன. இதில், அஸ்தினாபுரம் ஏரி இருந்த தடமே இல்லாமல் மறைந்து விட்டது.பல்லாவரம் பெரிய மற்றும் திருநீர்மலை, வீரராகவன் ஏரிகளின் பெரும்பகுதி, குடியிருப்புகளாக மாறிவிட்டன. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள, செட்டி குளமும், விரைவில் காணாமல் போய்விடும் நிலையை எட்டியுள்ளது. இன்னும் பல குளம், குட்டைகள், அரசியல்வாதிகளால், அடியோடு மறைந்து விட்டன.ஒவ்வொரு ஆண்டும், கடும் தண்ணீர் பஞ்சத்தால், பல்லாவரம் மக்கள் தவிக்கின்றனர். இதனால், எஞ்சியுள்ள நீர்நிலைகளையாவது, துார் வாரி மழைநீரை சேகரிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பால்கேணி குளம், பாப்பாத்தி குட்டை, திருவேங்கட முடையான் குட்டை ஆகியவற்றை துார் வாரி, ஆழப்படுத்த திட்டமிடப்பட்டது. நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், 2.25 கோடி ரூபாய் செலவில், மூன்று குளங்களையும் துார் வாரி ஆழப்படுத்துதல்; கரையை பலப்படுத்தி, நடைபாதை அமைத்தல்; சுற்றுச்சுவர், மின் விளக்கு, இருக்கை ஆகிய வசதிகள் அமைக்க, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கான டெண்டர் கோரப்பட்டு, பணிகளை துவக்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை