பர்கினோ பாசோவில் காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காவல்துறை அதிரடி தாக்குதல்

தினகரன்  தினகரன்
பர்கினோ பாசோவில் காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காவல்துறை அதிரடி தாக்குதல்

ஔகவுடோகோ: பர்கினோ பாசோ நாட்டில் காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவில் கானாவிற்கு அருகில் பர்கினா பாசோ நாடு உள்ளது. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் அவ்வப்போது பயங்கரவாத அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் சோம் மாகாணத்தின் அர்பிண்டா பகுதியில் உள்ள காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். சில மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், பைக்குகள், ஜிபிஎஸ் கருவிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

மூலக்கதை