சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்று கூறுவது நியாயமற்றது : விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்

தினகரன்  தினகரன்
சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்று கூறுவது நியாயமற்றது : விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்

டெல்லி : சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்று கூறுவது நியாயமற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம்  நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளுடன் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த செப்.5ம் தேதி லேண்டர் வாகனம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குதல் நிகழ்வு நடந்தது. அப்போது தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டர் உயரத்தில் இருந்து இஸ்ரோவுடனான லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ஆர்பிட்டர், லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதில் மென்மையான முறையில் தரையிறங்க புரோகிராம் செய்யப்பட்ட நிலையில் கடினமான முறையில் சாய்வாக தரையிறங்கியது தெரியவந்தது. மாநிலங்களவையில் கேள்வி, பதில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கேள்வி நேரத்தின் போது,  மாநிலங்களவையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.இ மனாஸ் ரஞ்சன் புனியா சந்திரயான் 2 திட்டம் பற்றி கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங், “ சந்திரயான் 2 திட்டம் அனைவராலும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்த திட்டமாகும்.உறுப்பினர் குறிப்பிட்டது போல, சில ஏமாற்றங்கள் நேர்ந்திருக்கலாம். அதேவேளையில், சந்திராயன் 2 திட்டத்தை தோல்வி என்று வரையறுப்பது நியாயமாக இருக்காது. உலகின்  எந்த ஒரு நாடும்  இரண்டு முயற்சிகளுக்கும்  குறைவாக நிலவில் சாப்ட் லேண்டிங்கை வெற்றிகரமாக செய்தது கிடையாது. சந்திரயான் 2 திட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் என இரண்டு வகையான அம்சங்கள் இருந்தன.  \'விஞ்ஞான நோக்கங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன, இதில் சந்திரன் மேற்பரப்பு மேப்பிங், இடவியல் ஆய்வுகள், ரேடார் அடிப்படையிலான ஆய்வுகள் போன்றவை அடங்கும்.தொழில் நுட்ப அடிப்படையில்,  வெற்றிகரமாக ஏவப்பட்டது, புவி வட்டப்பாதை மற்றும், சந்திரனின் சுற்றுவட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது. நீங்கள் கூறியது போல ஆர்பிட்டர் மிகவும் சிறப்பாக உள்ளது. தொடர்ச்சியான முயற்சிகளின் போது, செலவினத்தையும் குறைக்கும். கடைசி 30 கி.மீட்டரில் மட்டுமே அந்த நிகழ்வு நடைபெற்றது, எனவே இதை நான் தோல்வி என குறிப்பிடமாட்டேன்” என்றார். 

மூலக்கதை