சபரிமலையில் செல்போனுக்கு தடை?... நீதிபதி வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
சபரிமலையில் செல்போனுக்கு தடை?... நீதிபதி வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்ய கடந்த ஆண்டு இளம் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது தொடர்பான மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடைவிதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஏராளமான இளம் பெண்கள் இந்த வருடமும் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இளம் பெண்களை அனுமதிக்க கூடாது என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. இளம் பெண்களை அனுமதிப்பதால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும் என்று அரசும் எண்ணியது.இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். இறுதியாக இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் இளம் பெண்களுக்கு கடந்த ஆண்டை போல போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று அரசு அறிவித்தது. இதன் எதிரொலியாக இந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த ஆந்திராவை சேர்ந்த 12 இளம் பெண்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிறுமி ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் ஆன் லைனில் முன் பதிவு செய்து இருந்தனர். இதில் ஏராளமான இளம் பெண்களும் அடங்குவர். இந்த பட்டியலின் படி பார்த்தால் ஆந்திராவில் இருந்து 160, தமிழ்நாட்டில் இருந்து 139, கர்நாடகாவில் இருந்து 9, தெலங்கானாவில் இருந்து 8, ஒரிசாவில் இருந்து 3 பேர் என்று மொத்தம் 308 இளம் பெண்கள் பதிவு செய்து இருந்தது தெரியவந்தது.வீடியோவால் சர்ச்சை: சபரிமலை ஐயப்பன் கோயில் மூல விக்ரகம் தெரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் உள்பட சமூக இணைய தளங்களில் பரவி மிகவும் பரபரப்பபை ஏற்படுத்தியது. பொதுவாக கேரளாவில் எந்தவொரு கோயிலிலும் மூல விக்ரகத்தை படம் பிடிக்க அனுமதி கிடையாது. இந்த நிலையில் பாதுகாப்பு மிகுந்த சபரிமலை ஐயப்பன் ேகாயிலில் மூல விக்ரக காட்சிகளை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தரிசனத்துக்கு வந்த ஒரு பக்தர் ரகசியமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 18ம் படிக்கு மேல் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தேவசம் ஓம்புட்ஸ்மான் நீதிபதி ராமன் நேற்று சபரிமலையில் ஆய்வுக்காக வந்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் எந்தவொரு கோயிலிலும் மூல விக்ரகத்தை படம் பிடிப்பது கிடையாது. ஆனால் சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் மூல விக்ரகத்தை யாரோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.தரிசனத்துக்கு வந்த ஒருவர் தான் தனது சட்டைப்பையில் செல்போனை வைத்து ரகசியமாக படம் பிடித்து உள்ளார். இது மிகவும் மோசமான சம்பவமாகும். இதை கட்டுப்படுத்தியே தீர வேண்டும். எனவே 18ம் படிக்கு மேல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை