மீனவ கிராமங்களைக் காப்பாற்ற நீண்டகால நோக்கில் திட்டம் தேவை: மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
மீனவ கிராமங்களைக் காப்பாற்ற நீண்டகால நோக்கில் திட்டம் தேவை: மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

டெல்லி: மீனவ கிராமங்களைக் காப்பாற்ற நீண்டகால நோக்கில் திட்டம் தேவை என மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்கள் அருண்ஜெட்லி உட்பட 10 பேருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அமளிகளுக்கு இடையே அவையானது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மக்களவைக் கூட்டத்தின் பூஜ்யநேரத்தின்போது தி.மு.க மக்களவைக் குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடல் அரிப்பைத் தடுக்க நீண்டகாலத் திட்டம் தேவை என வலியுறுத்தினார். இது தொடர்பாக பேசிய அவர்; இந்தியா தனது கடற்கரைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை கடல் அரிப்பின் காரணமாக இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 41% கடற்கரைப் பகுதிகள் கடல் அரிப்பின் காரணமாக கடலுக்குள் போய்விட்டன. எனது தொகுதியான தூத்துக்குடி அதிக அளவு கடற்கரைப் பரப்பைக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில், நூற்றுக்கணக்கான மீனவ கிராமங்கள் இருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்குள் மீனவ கிராமங்களில் பாதியளவுக்கு கடலுக்குள் போயிருக்கின்றன. இது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல். அரசாங்கம் கடல் அரிப்பைத் தடுக்க சுவர்கள் கட்டுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது தற்காலிகமான நடவடிக்கைதான். இந்தியா முழுதும் நிலவும் இதுபோன்ற அசாதாரண கடற்கரை சூழலில் கடல் அரிப்பை தடுத்து கடற்கரையையும், மீனவர்களையும் காப்பாற்ற நீண்டகால திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

மூலக்கதை