வங்கதேசத்துடன் நாளை மோதல்: பிங்க் கலர் பந்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி: ஈடன் கார்டன் மைதானத்தில் உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கதேசத்துடன் நாளை மோதல்: பிங்க் கலர் பந்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி: ஈடன் கார்டன் மைதானத்தில் உற்சாகம்

கொல்கத்தா: வரலாற்று சிறப்பு மிக்க இந்திய அணியின் முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை கொல்கத்தாவில் துவங்குகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியின் வீரர்கள் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பிங்க் கலர் பந்தை வீசச் செய்து, பேட்ஸ்மேன்கள் அனைவரும் பயிற்சி எடுத்து வருகின்றனர். வங்கதேச அணி, இந்திய அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இந்தூரில் கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை கொல்கத்தாவில் துவங்க உள்ளது.

மேலும் இப்போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதாலும், இந்திய அணி ஆடவுள்ள முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பதாலும் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.



இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் தீவிர வலை பயிற்சி மேற்கொண்டனர். அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் பிங்க் கலர் பந்துகளை வீசி பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

மேலும் விராட் கோஹ்லி உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பிங்க் கலர் பந்துகளை எதிர்கொண்டு தீவிர பயிற்சியி–்ல் ஈடுபட்டனர். குறிப்பாக கேப்டன் கோஹ்லி, முகமது ஷமியை அதிகமாக பந்து வீசச் செய்து, அடித்து ஆடினார்.

ஷமியும் நேற்று பிற்பகல் முழுவதும் சளைக்காமல் அவருக்கு பந்து வீசினார். நேற்று இரவு 6 மணிக்கு பின்னரும், விளக்குகளின் வெளிச்சத்தில் 2 மணி நேரம் வரை பிங்க் கலர் பந்துகளை எதிர்கொண்டு இந்திய வீரர்கள், மிகவும் சிரத்தையாக பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

அணியின் ஸ்பின் பவுலர் அஸ்வின் கூறுகையில், ‘‘பிங்க் கலர் பந்தில் நான் பந்துவீசியதே இல்லை. இப்போதுதான் முதன் முதலாக பிங்க் கலர் பந்தையே நான் பார்க்கிறேன்.

எனக்கு ஒரு சமயம் அது பிங்க் கலராக தெரிகிறது. மற்றொரு சமயம் ஆரஞ்ச் கலராக தெரிகிறது.

மேலும் பந்தில் அரக்கு பூச்சு அதிகம் இருக்கிறது. இதனால் ஸ்விங் செய்வதற்கு ஏதுவாக இல்லை’’ என்று கூறினார்.

12வது பகலிரவு டெஸ்ட் போட்டி

முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் அடிலெய்டில் நடந்தது.

மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளன.


டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளில் இந்தியாவும், வங்கதேசமும் மட்டுமே இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடியதில்லை. எனவே இரு அணிகளுக்குமே இது முதலாவது பகலிரவு டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது 12வது பகலிரவு போட்டி. இதற்கு முந்தைய போட்டி கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்தது.

இதில் ஆஸி.

அணி, இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

.

மூலக்கதை