பயங்கரவாதம் - கிரிமினல் கும்பல்கள் கூட்டணி: முறியடிக்க உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு

தினமலர்  தினமலர்
பயங்கரவாதம்  கிரிமினல் கும்பல்கள் கூட்டணி: முறியடிக்க உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு

நியூயார்க்: 'பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கிரிமினல் கும்பல்களுக்கு இடையே உள்ள கூட்டணி மற்றும் தொடர்பு மிகவும் ஆபத்தானது. 'அனைத்து நாடுகளும் இணைந்து, எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும்' என, இந்தியா கூறியுள்ளது.ஐக்கிய நாடுகள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை இணைந்து, பயங்கரவாதம் மற்றும் கிரிமினல் குழுக்களுக்கு இடையேயான தொடர்பு குறித்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் பேசியதாவது:பயங்கரவாதம் என்பது, தற்போது உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஐ.எஸ்., அல்குவைதா, ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் அந்தந்த பிராந்தியங்களில் வன்முறையை தூண்டி வருகின்றன. இதுபோன்ற அமைப்புகளுக்கு, சில நாடுகளும், நிதி உதவி உள்ளிட்ட வசதிகளை செய்து தருகின்றன.இந்த பயங்கரவாத அமைப்புகள் நேரடியாக வன்முறையில் ஈடுபடுவதுடன், அந்தந்த நாட்டில் உள்ள கிரிமினல் கும்பல்களுக்கு உதவி செய்கின்றன. இது, அரசு நிர்வாகத்துக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.புதிய நவீன வசதிகள், சமூக வலைதளங்கள் போன்றவை, இந்த இரு தரப்பும் இணைந்து செயல்படுவதற்கு சாதகமாக அமைந்துள்ளன.தங்களுடைய அமைப்புகளுக்கு ஆட்களை திரட்டுவது, பணத்தை கைமாற்றுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு கிரிமினல் குழுக்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றன. ஆள் கடத்தல், போதைப் பொருள் போன்றவற்றுக்கும் உள்ளூர் கிரிமினல் குழுக்கள் உதவி வருகின்றன.அதேபோல, தங்களுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பணத்தை, பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கிரிமினல் குழுக்கள் பெறுகின்றன. இது உலகெங்கும் மறைமுகமாக நடந்து வருகின்றது. பயங்கரவாதம் மற்றும் கிரிமினல் குழுக்களுக்கு இடையேயான தொடர்பால், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில், வன்முறையை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, இரட்டை நிலைப்பாடு இல்லாமல், முழுமையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், அனைத்து நாடுகளும் இணைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை