கருப்பு பணத்தை கட்சிக்குள் கொண்டுவந்த பாஜக..: தேர்தல் பத்திரம் விவகாரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரமாரி புகார்

தினகரன்  தினகரன்
கருப்பு பணத்தை கட்சிக்குள் கொண்டுவந்த பாஜக..: தேர்தல் பத்திரம் விவகாரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரமாரி புகார்

புதுடெல்லி: கருப்பு பணத்தை கட்சிக்குள் கொண்டுவரவே ரிசர்வ் வங்கியின் விதியையும் மீறி பாரதிய ஜனதா அரசு தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் பத்திரம் வெளியிட்டது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நன்கொடையை 2000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக பெறும் திட்டத்தால் வெளிநாட்டு பணம் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போதைய அரசு மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது, என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டாகும். 2018ல் பத்திரங்கள் விற்பனை மற்றும் நன்கொடை பெறப்பட்டதில் 95% பாரதிய ஜனதாவுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. இதையடுத்து பேசிய திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு, மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இடஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் புகார் தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழர்களின் நாகரிக தொன்மை கி.மு 2006 ஆண்டுகள் என கீழடி அகழாய்வில் தெரிய வந்துள்ளதால் பாடப்பத்தகங்களில் இதற்கான தகவல்களை திருத்த வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலக்கதை