அமெரிக்கா வெளியேற்றிய 150 இந்தியர்கள் நாடு திரும்பினர்

தினமலர்  தினமலர்
அமெரிக்கா வெளியேற்றிய 150 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடில்லி,: அமெரிக்காவுக்குள்சட்டவிரோதமாக நுழைய முயன்ற, 150 இந்தியர்களை, அந்நாடு வெளியேற்றியது; அவர்கள் அனைவரும், நேற்று டில்லிக்கு வந்து சேர்ந்தனர்.

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதையடுத்து, அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா முறைகளில் பல கட்டுப்பாடுகளை அவர் விதித்தார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் இருந்து, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது தடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுக்குள், சட்டவிரோதமாக, முறையான விசா இல்லாமல் நுழைய முயன்றதாக, 150 இந்தியர்கள் சமீபத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும், விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கதேசம் வழியாக, டில்லி விமான நிலையத்துக்கு, 150 பேரும் நேற்று வந்து சேர்ந்தனர். ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, இவர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தாண்டு அக்டோபரில், சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக, 300 இந்தியர்களை, மெக்சிகோ அரசு திருப்பி அனுப்பியது. அதன்பிறகு, அதிக எண்ணிக்கையில், இந்தியர்கள் தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

டில்லி திரும்பிய, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவைச் சேர்ந்த ஜபர்ஜங்க் சிங், 24, கூறியதாவது: நான், நான்காவது முறையாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன். இந்தாண்டு மே, 15ல், விமானம் மூலம் மெக்சிகோ புறப்பட்டேன். ரஷ்யாவின் மாஸ்கோ, பிரான்சின் பாரிஸ் வழியாக மெக்சிகோ சென்றேன். மே, 16ல், கலிபோர்னியா நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப் பட்டேன்.

அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு பலிக்கவில்லை. இதுவரை, நான்கு முறையும் சேர்த்து, 24 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். அதைத் தவிர, சட்ட நடவடிக்கைகளுக்காக, 40 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

பஞ்சாபைச் சேர்ந்த லக்விந்தர் சிங் கூறியதாவது:அமிர்தசரசை சேர்ந்த ஓர் ஏஜென்ட் மூலம், அமெரிக்கா செல்ல முயன்றேன். இதற்காக, 25 லட்சம் ரூபாய் செலவு செய்தேன். மாஸ்கோ, பாரிஸ் வழியாக மெக்சிகோ வரை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது சிக்கினேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை